மாவட்டம் முழுவதும் மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 306 பேர் கைது
தேனி மாவட்டம் முழுவதும் மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 306 பேரை போலீசார் கைது செய்தனர்.
தேனி,
தேனியில் நேரு சிலை பகுதியில் நகர பொறுப்பாளர் முருகேசன் தலைமையில் சாலை மறியல் நடந்தது. மறியலில் ஈடுபட்ட 40 பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் தேனி மாவட்ட பொறுப்பாளர் ஜெயக்குமார் தலைமையில், கம்பம் போக்குவரத்து சிக்னல் முன்பு குமுளி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து தி.மு.க.வினர் மறியல் செய்தனர். இதைத்தொடர்ந்து 53 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆண்டிப்பட்டி ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் மகாராஜன் தலைமையில், பேரணியாக வந்து ஆண்டிப்பட்டி வைகை அணை சாலைப்பிரிவில் தி.மு.க.வினர் மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 23 பேரை ஆண்டிப்பட்டி போலீசார் கைது செய்தனர்.
பெரியகுளம் மூன்றாந்தல் காந்தி சிலை அருகே தி.மு.க. மாநில விவசாய தொழிலாளர் அணி தலைவர் எல்.மூக்கையா தலைமையில் தேனி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
மறியலில் ஈடுபட்ட ஒன்றிய செயலாளர் போஸ், முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவர் பாண்டியன், தாமரைக்குளம் பேரூராட்சி முன்னாள் தலைவர் அன்பழகன், முன்னாள் நகர செயலாளர் ரவி உள்பட 40 பேரை தென்கரை போலீசார் கைது செய்தனர். அதேபோன்று வடகரை, மதுரை சாலையில் புது பஸ்நிலைய பிரிவு அருகே நகர இளைஞரணி அமைப்பாளர் குமரேசன் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் 14 தி.மு.க.வினரை பெரியகுளம் போலீசார் கைது செய்தனர்.
உத்தமபாளையம் பைபாஸ் சாலையில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் குமரன் தலைமையில் மறியல் நடந்தது. இதில் பங்கேற்ற 25 பேரை போலீசார் கைது செய்தனர். ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி தலைமையில் கடமலைக்குண்டுவில் நடந்த போராட்டத்தில் 29 பேர் கைதானார்கள்.
போடியில் நகர, ஒன்றிய தி.மு.க. சார்பில் தேவர் சிலை அருகே முன்னாள் எம்.எல்.ஏ. லட்சுமணன் தலைமையில் தி.மு.க.வினர் மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து மறியல் செய்த 62 பேரை போலீசார் கைது செய்தனர்.
சின்னமனூரில் மார்க்கையன்கோட்டை சந்திப்பில் மறியலில் ஈடுபட்ட தி.மு.க. நகர செயலாளர் முத்துகுமார் உள்பட 20 பேர் கைது செய்யப்பட்டனர். மாவட்டம் முழுவதும் மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் மொத்தம் 306 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்களில் தங்கவைக்கப்பட்டனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். மறியலின் போது ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், தமிழக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.