ராஜபாளையம் அருகே ஊருணியில் கட்டப்பட்ட 17 கடைகள் இடித்து அகற்றம்
ராஜபாளையம் அருகே ஊருணி புறம்போக்கு பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 17 கடைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
ராஜபாளையம்,
ராஜபாளையம் அருகே வாகைக்குளம்பட்டியில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியை சுற்றிலும் அரசுக்கு சொந்தமான 45 சென்ட் ஊருணி புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த இடத்தில் அனுமதியின்றி தனியார் பள்ளி நிர்வாகம் சார்பில் 17 கடைகள் மற்றும் ஒரு வீடு ஆகியவை கட்டி வாடகைக்கு விடப்பட்டிருந்தது.
இதை அறிந்த வருவாய்த் துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி பள்ளி நிர்வாகத்திற்கு 3 முறை நோட்டீஸ் அனுப்பினர். இதற்கு பதிலளிக்காத பள்ளி நிர்வாகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில்அரசுக்கு சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை தொடர்ந்து நேற்று காலை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது.
காலை 8 மணியில் இருந்து ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் தொடங்கின. தாசில்தார் ராமச்சந்திரன் தலைமையில், வருவாய்த் துறையினர், தீஅணைப்பு துறையினர், நெடுஞ்சாலைத் துறையினர், மின்வாரிய துறையினர் இணைந்து 300 போலீசார் பாதுகாப்புடன் கட்டிடங்களை இடிக்கும் பணிகள் நடைபெற்றன.
4 ஜே.சி.பி. எந்திரங்கள் மூலம் சுமார் 3 மணி நேரத்தில் பள்ளியை சுற்றி கட்டப்பட்டிருந்த 17 கடைகளும் வீடும் அகற்றப்பட்டன. இதனால் அரசுக்கு சொந்தமான ரூ. 1 கோடியே 35 லட்சம் மதிப்புள்ள நிலம் மீட்கப் பட்டுள்ளது என வருவாயத்துறையினர் தெரிவித்தனர். மேலும் அந்த பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 2 வீடுகளையும் இடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தாசில்தார் ராமச்சந்திரன் தெரிவித்தார்.