8 வழி பசுமை சாலைக்கு எதிர்ப்பு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் தீக்குளிக்க முயற்சி

பாப்பிரெட்டிப்பட்டி அருகே 8 வழி பசுமை சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-06-23 23:15 GMT
தர்மபுரி,

சேலம்-சென்னை இடையே 8 வழி பசுமை சாலை அமைக்கப்படுகிறது. இதையடுத்து தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில் நிலம் அளவீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று 4-வது நாளாக வருவாய்த்துறையினர், நில அளவையாளர்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இந்த பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் பாப்பி ரெட்டிப்பட்டி அருகே உள்ள நடுப்பட்டி கிராமத்தில் வருவாய்த்துறையினர் அளவீடு செய்வதற்கு போலீசாருடன் சென்றனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த விவசாயி கார்த்திக் (வயது 35) தனது மனைவி பாலாமணி (24), மகள் ஸ்ரீநிதி (6), மகன் ரோகித் (5), தாயார் ஜோதி மற்றும் மாமனார் ஜோதி ஆகியோருடன் மண்எண்ணெய் கேனுடன் வந்து வீடு மற்றும் நிலத்தை அளவீடு செய்ய எதிர்ப்பு தெரிவித்தார்.

தொடர்ந்து கார்த்திக் திடீரென உடலில் மண்எண்ணெய்யை எடுத்து வந்து உடலில் ஊற்றி தற்கொலை மிரட்டல் விடுத்தார். அங்கு பாதுகாப்புக்கு சென்ற போலீசார் கார்த்திக் மீது தண்ணீரை ஊற்றி வேறு உடை அணிய செய்தனர். கார்த்திக்கின் மனைவி பாலாமணி நிலத்தை அளவீடு செய்தால் குடும்பத்துடன் தீக்குளிப்போம் என்று அலுவலர்களிடம் மண்எண்ணெய் கேனை காட்டினார். தொடர்ந்து மற்றவர்களும் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் வருவாய்த்துறை அலுவலர்கள் நிலத்தை அளவீடு செய்யாமல் அங்கிருந்து திரும்பி சென்றனர்.

இதையடுத்து வருவாய்த் துறையினர் லட்சுமாபுரம் பகுதியில் நிலம் அளவீடு செய்ய சென்றனர். அப்போது பல லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அரசு உயர்நிலை பள்ளிக்கூடம் வழியாக பசுமை சாலை செல்கிறது. அலுவலர்கள் இந்த பள்ளியை அளவீடு செய்ய சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கிராம மக்கள் அங்கு திரண்டு அளவீடு செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர். போலீசார் அவர்களை சமரசம் செய்தனர். இதனால் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்