மணல் கடத்தலை தடுக்க செல்லும் வருவாய் ஆய்வாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்

மணல் கடத்தலை தடுக்க செல்லும் வருவாய் ஆய்வாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று திருச்சியில் நடந்த மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2018-06-23 22:45 GMT
திருச்சி,

தமிழ்நாடு வருவாய்த்துறை நேரடி நியமன அலுவலர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே ஒரு ஓட்டலில் நேற்று நடந்தது. மாநில தலைவர் சையதுஅபுதாகீர் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் தர்மராஜ் முன்னிலை வகித்தார்.

மாநில பொருளாளர் ரமேஷ்போஸ், சங்க நிறுவனத் தலைவர் இருளப்பன், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தனலிங்கம், கிருஷ்ணமூர்த்தி, முருகானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

வருவாய்த்துறை நேரடி நியமன உதவியாளர்களை தமிழ்நாடு வருவாய்த்துறை சார்நிலை பணித்தொகுதிக்கு மாற்றம் செய்து அறிவிப்பு வெளியிட வேண்டும். நேரடி நியமன அலுவலர்களுக்கு வருவாய் ஆய்வாளர் பயிற்சியை ஓராண்டாக குறைத்து அரசாணை வெளியிட வேண்டும். மாவட்ட வருவாய் அலகில் இளநிலை உதவியாளர் முதல் வட்டாட்சியர் வரை உள்ள பணியிடங்களில் மாவட்ட அளவில் பொது கலந்தாய்வு முறையை அமல்படுத்திட அரசாணையை வெளியிட வேண்டும்.

திருச்சி மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுக்க சென்ற வருவாய் ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்திய குண்டர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். மணல் கடத்தலை தடுக்க செல்லும் வருவாய் ஆய்வாளர்களுக்கு உரிய பாதுகாப்பை மாவட்ட நிர்வாக வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

மேலும் செய்திகள்