நவீன கரிகால சோழனாக திகழ்கிறார் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நவீன கரிகால சோழனாக திகழ்கிறார் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

Update: 2018-06-22 22:47 GMT
பெத்தநாயக்கன்பாளையம்,

ஆத்தூர் ராணிப்பேட்டையில், சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. மற்றும் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் அ.தி.மு.க. அரசின் காவிரி நதிநீர் மீட்பு வெற்றிவிழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவருமான ஆர்.இளங்கோவன் தலைமை தாங்கினார்.

ஆத்தூர் நகர செயலாளர் மோகன் வரவேற்றார். எம்.எல்.ஏ.க்கள் சின்னதம்பி, மருதமுத்து, மாவட்ட துணை செயலாளர்கள் அர்ச்சுனன், தங்கமணி, பொருளாளர் ஜெகதீசன், ஒன்றிய செயலாளர்கள் ரஞ்சித்குமார், முருகேசன், நரசிங்கபுரம் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஜெயலலிதா பேரவை செயலாளரும், வருவாய்த்துறை அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்த திட்டங்களை, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்புடன் செயல்படுத்தி வருகிறார். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க. அழிந்து விடும் என்று நினைத்தவர்களின் கனவு பலிக்காமல் போய்விட்டது. காவிரி நதிநீர் ஒப்பந்தம் கடந்த 1924-ம் ஆண்டு போடப்பட்டது. 50 ஆண்டுகளுக்கு பிறகு 1974-ம் ஆண்டு புதுப்பித்து இருக்க வேண்டும்.

ஆனால் அதனை செய்யாமல் தமிழக மக்களின் உரிமையை காவு கொடுத்தவர் கருணாநிதி. ஜெயலலிதா வழியில், சட்டப்போராட்டம் நடத்தி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை பெற்று சரித்திர சாதனை படைத்துள்ளார் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. கல்லணையை கட்டியவர் கரிகால சோழன். இவர் நவீன கரிகால சோழனாக திகழ்கிறார்.

நாடு வளர்ச்சி அடைய சாலை மேம்பட வேண்டும். மும்பை-புனே இடையே 8 வழிச்சாலை உள்ளது. அதே போல சேலம்-சென்னை இடையே 8 வழி பசுமை சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக தற்போது வரைபடம் மூலம் நில அளவீடு செய்யப்படுகிறது. இதில் குறைகள் இருந்தால் தெரிவிக்கலாம். கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு 3 மடங்கு இழப்பீடு வழங்கப்படும். விவசாயிகளை பாதிக்கும் திட்டங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி செயல்படுத்த மாட்டார்.

தமிழகத்தில் தேர்தல் வர வேண்டும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மட்டும் சொல்கிறார். நான் சவால் விடுகிறேன். தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தேர்தல் வர வேண்டும் என்று பகிரங்கமாக சொல்லமுடியுமா?. அவர்களால் முடியாது. ஏனெனில் யாரும் தேர்தலை சந்திக்க விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் மெடிக்கல் ராஜா, பொருளாளர் குபேந்திரன், தலைவாசல் ஒன்றிய செயலாளர்கள் ராமசாமி, பெரியசாமி, மகளிர் அணி மாவட்ட செயலாளர் பொன்னம்மாள், சிறுபான்மை பிரிவை சேர்ந்த முஸ்தபா, கூட்டுறவு வங்கி தலைவர்கள் தென்னரசு, வாசுதேவன், பெத்தநாயக்கன்பாளையம் முன்னாள் தலைவர் ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பெத்தநாயக்கன்பாளையம் வடக்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்