பல்லடத்தில் புதிய கல்வி மாவட்ட அலுவலகம்: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கிவைத்தார்

பல்லடத்தை தலைமையிடமாக கொண்ட புதிய கல்வி மாவட்ட அலுவலகத்தின் தொடக்கவிழா நேற்று நடைபெற்றது. புதிய அலுவலகத்தை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கிவைத்தார்.

Update: 2018-06-22 23:15 GMT
பல்லடம், 

திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த கல்வி மாவட்டம் 4 ஆக பிரிக்கப்பட்டது. அதன்படி திருப்பூர், பல்லடம், உடுமலை, தாராபுரம் என 4 கல்வி மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. இதன் மூலம் பல்லடம், பொங்கலூர், காங்கேயம் ஆகிய ஒன்றிய பகுதியில் உள்ள ஆசிரியர்கள் கல்விப்பணிக்காக இனி திருப்பூர் செல்ல வேண்டிய நிலை தவிர்க்கப்பட்டது.

இந்த நிலையில் பல்லடத்தை தலைமையிடமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள புதிய கல்வி மாவட்ட அலுவலகம் பல்லடம்-மங்கலம் ரோட்டில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கல்வி மாவட்ட அலுவலகத்தின் தொடக்க விழா நேற்று காலை நடைபெற்றது.

பல்லடம் புதிய கல்வி மாவட்ட அலுவலக தொடக்க விழாவுக்கு மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கி னார். மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி, எம்.எல்.ஏ.க்கள் கரைப்புதூர் நடராஜன்(பல்லடம்), விஜயகுமார் (திருப்பூர் வடக்கு), குணசேகரன் (திருப்பூர் தெற்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சாந்தி வரவேற்று பேசி னார். விழாவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பல்லடம் புதிய கல்வி மாவட்ட அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார். கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் குத்துவிளக்கு ஏற்றிவைத்தார். விழாவில் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன திருமூர்த்தி நகர் முதல்வர் திருஞானசம்பந்தம், மாவட்ட கல்வி அலுவலர் கனகமணி, மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர்கலந்துகொண்டனர்.

முன்னதாக பல்லடம் அரசு கலைக்கல்லூரியில் ரூ.8 கோடி மதிப்பில் தரைத்தளம் மற்றும் 2 மாடி கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு பூமிபூஜை செய்து பணியை தொடங்கிவைத்தனர். இதுபோல் திருப்பூர் ஊராட்சி ஒன்றியம் முதலிபாளையம் ஊராட்சி வீட்டு வசதி பிரிவு (ஹவுசிங் யூனிட்) பகுதியில் புதிய ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியையும் அமைச்சர்கள் தொடங்கிவைத்தனர். நிகழ்ச்சியில் அ.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், எம்.எல்.ஏ.க்கள், கல்லூரி முதல்வர் பொன்முத்துராமலிங்கம், துணை முதல்வர் ஜெயச்சந்திரன், மாவட்ட கல்வி அலுவலர்கள் மணிவண்ணன் (உடுமலை), விஜயலட்சுமி (திருப்பூர்), சிவக்குமார் (தாராபுரம்) உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்