வாடிக்கையாளருக்கு சேவைக்குறைபாடு: ரூ.18 ஆயிரம் நஷ்டஈடு வழங்க கூட்டுறவு கடன் சங்கத்துக்கு உத்தரவு

வாடிக்கையாளருக்கு சேவைக்குறைபாடு ஏற்படுத்திய கூட்டுறவு கடன் சங்கம் ரூ.18 ஆயிரம் நஷ்டஈடு வழங்க திண்டுக்கல் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Update: 2018-06-22 22:15 GMT

திண்டுக்கல்,

திண்டுக்கல் அருகே உள்ள ஏ.வெள்ளோடு கிராமத்தை சேர்ந்த கூத்தன் மகன் வேல்மயில். இவர், கடந்த 6–4–1990 அன்று காந்திகிராமம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 20 ஆண்டு வைப்புத்தொகையாக ரூ.15 ஆயிரம் செலுத்தினார். அப்போது, 20 ஆண்டுகள் கழித்து வட்டியுடன் சேர்த்து முதிர்வு தொகையாக ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்து 876 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, கடந்த 6–4–2010 அன்று முதிர்வு தொகையை பெற கூட்டுறவு கடன் சங்கத்துக்கு சென்றார். அப்போது, 6 மாதங்கள் கழித்து தருவதாக தெரிவித்தனர். அதன்படி சென்று கேட்டபோது தகாத வார்த்தைகளால் பேசி அனுப்பிவிட்டனர். இதைத்தொடர்ந்து, 2014–ம் ஆண்டு வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பினார்.

ஆனால், அதற்கும் கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் உரிய பதில் அளிக்கவில்லை. இதனால், மன உளைச்சல் அடைந்த வேல்மயில் கடந்த 27–3–2015 அன்று கூட்டுறவு கடன் சங்கம் மீது திண்டுக்கல் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இருதரப்பினரையும் விசாரித்த நீதிபதி ஜெயசங்கரன், உறுப்பினர்கள் சேக் அப்துல் காதர், முத்துலட்சுமி ஆகியோர் நேற்று தீர்ப்பளித்தனர். அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–

வாடிக்கையாளருக்கு முதிர்வு தொகையை வழங்காமலும், உரிய பதில் அளிக்காமலும் இருப்பது சேவைக்குறைபாடாகும். எனவே, முதிர்வு தேதியில் இருந்து வழக்கு தொடர்ந்த நாள் வரை முதிர்வு தொகையுடன் 7 சதவீத வட்டியும் சேர்த்து கொடுக்க வேண்டும்.

இதேபோல, 28–3–2015 முதல் பணத்தை கொடுக்கும் நாள் வரை முதிர்வு தொகைக்கு 6 சதவீத வட்டியும் வழங்க வேண்டும். மேலும், மனஉளைச்சலுக்கு ரூ.15 ஆயிரம், வழக்கு செலவுக்கு ரூ.3 ஆயிரம் என மொத்தம் ரூ.18 ஆயிரத்தை வாடிக்கையாளருக்கு நஷ்டஈடாக கூட்டுறவு கடன் சங்கம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்