மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் பசுமை சாலை திட்டத்தை அரசு பரிசீலனை செய்ய வேண்டும் - முத்தரசன் பேட்டி
மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் சேலம்– சென்னை பசுமை சாலை திட்டத்தை அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.
விழுப்புரம்,
விழுப்புரத்தில் நேற்று மாலை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
தமிழகம் முழுவதும் 1 கோடி கிராமப்புற விவசாய தொழிலாளர்களை மத்திய, மாநில அரசுகள் முற்றிலும் புறக்கணித்து விட்டன. வேலையின்மை மற்றும் அவர்களுக்கு வழங்க வேண்டிய சலுகைகளை வழங்காததால் விவசாயிகள் நிற்கதியாக உள்ளனர். விவசாய தொழிலாளர்களுக்கு வேலையின்மை, வீடு இல்லை மற்றும் ஓய்வூதியம், கல்வி இந்த பிரச்சினைகளை முன்வைத்து விழுப்புரத்தில் செப்டம்பர் மாதம் 1, 2, 3–ந் தேதிகளில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் 12–வது மாநில மாநாடு நடக்கிறது.
மத்திய, மாநில அரசுகளின் கொள்கைகளை யாரும் விமர்சிக்கக்கூடாது என்பதற்காக தமிழக அரசு மிக கடுமையான அடக்குமுறையையும், சர்வாதிகார போக்கையும் கையாண்டு வருகிறது. சேலம்– சென்னை இடையே பசுமை வழிச்சாலையை ரூ.10 ஆயிரம் கோடியில் அமைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். வளர்ச்சி ஒருபக்கம் இருந்தாலும் இந்த திட்டத்தினால் 2,200–க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் நிலங்களை இழக்க வேண்டிய அபாயத்தில் உள்ளனர். இப்படி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு அதனால் வளர்ச்சி என்றால் அந்த திட்டம் தேவையில்லை. எனவே பசுமை சாலை திட்டத்தை அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் இரட்டை வேடம் போடுகிறது. இதே நிலை தொடர்ந்தால் இன்னும் தீவிரமாக போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.