பாளையங்கோட்டையில் கோவிலில் உண்டியல் பணம்– வெள்ளி பொருட்கள் திருட்டு மர்மநபர்களுக்கு வலைவீச்சு

பாளையங்கோட்டையில் கோவில் பூட்டை உடைத்து உண்டியல் பணம் மற்றும் வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.

Update: 2018-06-22 20:45 GMT

நெல்லை, 

பாளையங்கோட்டையில் கோவில் பூட்டை உடைத்து உண்டியல் பணம் மற்றும் வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் திருடிச் சென்றனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவிலில் திருட்டு

பாளையங்கோட்டை வி.எம்.சத்திரத்தில் கொடி மரத்து சுடலை கோவில் உள்ளது. இந்த கோவில் பூசாரி நேற்று முன்தினம் மாலை வழக்கம் போல் கோவிலை பூட்டிச் சென்றார். நேற்று காலை கோவிலின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து பெருமாள்புரம் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

சப்–இன்ஸ்பெக்டர் பழனி முருகன் தலைமையில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், கோவிலில் இருந்த உண்டியல் பணம், வெள்ளி பொருட்கள் திருடப்பட்டு இருந்தன. திருடு போன பொருட்களின் மதிப்பு ரூ.1 லட்சம் என கூறப்படுகிறது.

காரில் வந்த மர்ம கும்பல்

மேலும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கீழ்கண்ட தகவல்கள் கிடைத்தன. நேற்று முன்தினம் மதியம் கொடி மரத்து கோவில் அருகே ஒரு கார் வந்தது. அந்த காரில் 2 ஆண்கள், 2 வாலிபர்கள், 2 பெண்கள் இருந்தனர். அவர்கள், அந்த பகுதியில் இறங்கி நோட்டமிட்டு உள்ளனர். சிறிது நேரத்துக்கு பிறகு திரும்பிச் சென்றனர். அன்று இரவு மீண்டும் அந்த கும்பல் வந்து, கோவில் பூட்டை உடைத்து திருடியது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்