திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்திற்கு புதிய அலுவலக கட்டிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி அடிக்கல் நாட்டினார்

திருச்சுழி ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலகம் கட்டிடம் கட்டப்படுகிறது. இதனை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.

Update: 2018-06-22 21:45 GMT

திருச்சுழி,

திருச்சுழி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எம்.ரெட்டியபட்டியில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலக கட்டிடத்தில் போதிய இடவசதி இல்லாததால் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இதுதொடர்பாக அலுவலக கட்டிடத்தை விரிவாக்கம் செய்து புதிய கட்டிடம் அமைத்துத்தர இந்தபகுதி மக்கள் அரசுக்கு பல முறை கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதைத்தொடர்ந்து ரூ.2 கோடியே 54 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்ட அரசு நிதி ஒதுக்கீடு செய்து அனுமதியளித்தது. இதையடுத்து எம். ரெட்டியபட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் புதிய கட்டிடத்திற்கான பூமி பூஜை நடைபெற்று, கட்டுமானப் பணிகள் தொடங்கின.

நிகழ்ச்சியில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இதில் கலெக்டர் சிவஞானம், திருச்சுழி ஒன்றிய செயலாளர் முத்துராமலிங்கம், கழக சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைத் தலைவர் சித்திக், ஒன்றிய அவைத் தலைவர் சொக்கர், ஜெயலலிதா பேரவைச் செயலாளர் முனியாண்டி, திருச்சுழி ஒன்றிய கூட்டுறவு சங்க தலைவர்கள் கே.பி.என். கருப்பசாமி, வீரக்குமார், திருமுருகன், ராதாகிருஷ்ணன், ராமலிங்கம், மடத்துப்பட்டி முத்துராஜா, கல்லூரணி மேற்கு கிளைச் செயலாளர் முத்துவேல் உள்பட அதிகாரிகள், கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்