கிராம சுயாட்சி இயக்கத்தின்கீழ் மத்திய அரசு திட்டங்கள்; கலெக்டர் ஆய்வு
கிராம சுயாட்சி இயக்கத்தின் கீழ் மத்திய அரசு திட்டங்களை மாவட்ட கலெக்டர் நடராஜன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
பனைக்குளம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் கிராம சுயாட்சி இயக்கம் திட்டத்தின்கீழ் முதற்கட்டமாக மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள 34 வருவாய் கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களான ஏழைகளுக்கான இலவச எரிவாயு திட்டம், அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்கும் திட்டம், அனைவருக்கும் வங்கி கணக்கு திட்டம், விபத்து காப்பீடு மற்றும் உயிர் காப்பீடு திட்டங்கள், மிஷன் இந்திர தனுஷ் தடுப்பூசி போடும் திட்டம், எல்.இ.டி. பல்புகள் வழங்கும் திட்டம் உள்பட 7 வகையான திட்டங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
அதன் தொடர்ச்சியாக 2–ம் கட்டமாக ஜூலை 31–ந்தேதி வரையிலான நாட்களில் மாவட்டத்தில் மீதம் உள்ள 364 வருவாய் கிராமங்களிலும் இந்த 7 திட்டங்களோடு கூடுதலாக விவசாயிகளின் நலனை காத்திடும் வகையில் விவசாயிகளின் ஆண்டு வருமானத்தினை இரட்டிப்பாக்குவதற்கு கிராம விவசாய இயக்கம் திட்டம், பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் ஆகியவற்றை சீர்செய்து குடிநீர் வசதி மற்றும் கழிப்பறை வசதி ஏற்படுத்துவதற்கான திட்டம் ஆகியவை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இத்தகைய நடவடிக்கைகளில் கிராமப்புறங்களில் உள்ள பயனாளிகள் விடுபடாமல் 100 சதவீதம் அரசு திட்டங்களை முழுமையாக கொண்டு சேர்க்க ஏதுவாக மாவட்ட கலெக்டர் நடராஜன், உத்தரவின்படி மகளிர் திட்டத்தின் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களை சார்ந்த உறுப்பினர்கள் மூலம் ஒவ்வொரு வருவாய் கிராமத்திற்கும் உட்பட்ட குக்கிராமங்கள் வாரியாக ஒவ்வொரு வீடாக நேரடியாக சென்று மேற்குறிப்பிட்ட திட்டங்களின் கீழ் பயன் அடைந்தவர்கள் மற்றும் விடுபட்டவர்கள் குறித்த விவரங்களை சேகரிக்க கள ஆய்வு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை கலெக்டர் ஆய்வு செய்துவருகிறார்.
இந்த நிலையில் உச்சிப்புளியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு மாவட்ட கலெக்டர் நேரடியாக சென்று பாரத பிரதமரின் அனைவருக்கும் வங்கி கணக்கு, விபத்து காப்பீடு மற்றும் உயிர் காப்பீடு ஆகிய திட்டங்களின் கீழ் 100 சதவீதம் பயனாளிகளை விடுபடாமல் சேர்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றி ஆய்வு செய்தார். அப்போது கடந்த 1–ந்தேதி முதல் இதுவரை உச்சிப்புளி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையின் மூலமாக மட்டும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து அனைவருக்கும் வங்கி கணக்கு திட்டத்தின் கீழ் 15 நபர்களும், விபத்து காப்பீடு திட்டத்தின் கீழ் 179 நபர்களும், உயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் 269 நபர்களும் புதிதாக சேர்க்கப்பட்டுஉள்ளனர் என வங்கி கிளை மேலாளர் தெரிவித்தார்.
மேலும் கள ஆய்வுப்பணியில் ஈடுபட்டுள்ள மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களிடத்தில் பயனாளிகள் குறித்த விவரங்களை சேகரிப்பதில் கூடுதல் முனைப்புடன் செயல்பட வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் மாவட்ட மகளிர் திட்டம் திட்ட இயக்குனர் குருநாதன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் (சிறப்பு பணி) சுரேஷ் பாபு, உதவி மகளிர் திட்ட அலுவலர்கள் சரவணப்பாண்டியன், குருசாமி உள்பட அரசு அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்களை சார்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.