தினமும் யோகா செய்தால் மன அமைதி, உடல் ஆரோக்கியம் கிடைக்கும் கலெக்டர் ராமன் பேச்சு
தினமும் யோகா செய்தால் மன அமைதி, உடல் ஆரோக்கியம் கிடைக்கும் என்று சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் கலெக்டர் ராமன் பேசினார்.
வேலூர்,
சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி வேலூர் கோட்டை வெளிபூங்காவில் பல்வேறு அமைப்புகள் சார்பில் யோகா நிகழ்ச்சி நடந்தது. இந்திய செஞ்சிலுவை சங்க மாவட்ட செயலாளர் இந்தர்நாத் வரவேற்றார். கலெக்டர் ராமன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து மனைவி தேவிராமன் மற்றும் பள்ளி கல்லூரி மாணவிகளுடன் சேர்ந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.
பெங்களூருவை சேர்ந்த யோகா பயிற்சி ஆசிரியர்கள் பல்வேறு விதமான யோகா பயிற்சிகளை செய்து காண்பித்தனர். அதனை கலெக்டர் உள்பட அனைவரும் ஆர்வத்துடன் செய்தனர்.
நிகழ்ச்சியின் முடிவில் கலெக்டர் பேசியதாவது:-
மன அமைதி, உடல் ஆரோக்கியம்
யோகா பயிற்சியினை வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரும் செய்யலாம். தினமும் யோகா செய்தால் மன அமைதி, உடல் ஆரோக்கியம் கிடைக்கும். மேலும் உடலில் ரத்த ஓட்டம் சீராகும். நீண்ட ஆயுள் பெற்று நோய், நொடியின்றி வாழலாம். மாணவர்கள் யோகா தினத்தில் மட்டுமின்றி தினந்தோறும் யோகா பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் ஆரோக்கியத்துடன் இருக்க முடியும். யோகா பயிற்சி செய்யும் நபர்கள் சிந்தனைகள் சிறப்பாகவும், அவர்கள் உடல் சுறுசுறுப்பாகவும் காணப்படும்.
இதன்மூலம் அவர்கள் சமூகத்தில் மற்றவர்களை காட்டிலும் முன்னோடியாக திகழ முடியும். ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் யோகா பயிற்சி செய்ய வேண்டும். அப்படி செய்தால் வாழ்க்கை முறையை யோகா சீராக்கும். மாணவ- மாணவிகளும் இதை உணர்ந்து தினமும் யோகா செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
காவல்துறையினருக்கு...
நிகழ்ச்சியில் வேலூர் சரக டி.ஐ.ஜி. வனிதா, மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையன், செஞ்சிலுவை சங்க மாவட்ட துணைத்தலைவர் எம்.வெங்கடசுப்பு, நேரு யுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் விஜயா, வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் காவல்துறையினருக்கு யோகா நிகழ்ச்சி நடந்தது. போலீஸ் சூப்பிரண்டு பகலவன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி யோகா பயிற்சியை தொடங்கி வைத்தார்.
இதில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ஸ்ரீதரன், விநாயகம், அலெக்ஸ் உள்பட ஏராளமான போலீசார் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்தனர். மாவட்டம் முழுவதும் பள்ளி மாணவ-மாணவிகள், பல்வேறு அமைப்பினர் யோகா பயிற்சி மேற்கொண்டனர்.
வி.ஐ.டி.
இதேபோல் வி.ஐ.டி.யில் யோகா பயிற்சி நடந்தது. இதனை போலீஸ் சூப்பிரண்டு பகலவன் தொடங்கி வைத்து, யோகா செய்வதன் அவசியம் மற்றும் அதன் சிறப்புகளை பற்றி கூறினார்.
இதில், வி.ஐ.டி. துணைத்தலைவர் ஜி.வி.செல்வம், இணை துணைவேந்தர் எஸ்.நாராயணன், பேராசிரியர்கள் மற்றும் காங்கேயநல்லூரில் உள்ள திருமுருக கிருபானந்த வாரியார் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.
வி.ஐ.டி. உடற்கல்வித்துறை துணை இயக்குனர்கள் தியாகசந்தன் மற்றும் மங்கையர்கரசி ஆகியோர் யோகா பயிற்சி குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர்.