திருப்பத்தூரில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
திருப்பத்தூரில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் 32-வது வார்டில் வெங்கடேஸ்வரா நகர், தில்லை நகர் உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 30 ஆயிரம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குழாய் மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்றபோது மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு செல்லும் குழாய் உடைந்து விட்டதால் கடந்த 2 மாதமாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறுப்படுகிறது.
இதுகுறித்து அந்த பகுதி மக்கள் நகராட்சி அலுவலகம், சப்-கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.
சாலை மறியல்
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் தே.மு.தி.க. நகர செயலாளர் சேட்டு தலைமையில் வெங்கடேஸ்வரா நகரில் திருப்பத்தூர் - திருவண்ணாமலை ரோட்டில் நேற்று காலை 8-30 மணிக்கு திடீரென காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் திருப்பத்தூர் போலீசார் மற்றும் நகராட்சி அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பொதுமக்கள் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். தெருவிளக்குகள் சரியாக எரிவதில்லை. குப்பை தொட்டிகளை வைக்க வேண்டும் என்று கூறினர். அதற்கு நகராட்சி அலுவலர்கள், குடிநீர் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும், தெருவிளக்குகள் எரியவும், குப்பை தொட்டிகள் வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் காலை 9-15 மணிக்கு கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் 45 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்பவர்கள் மிகவும் அவதிக்குள்ளானார்கள்.