12 ஊராட்சிகளில் காவிரி தண்ணீர் வினியோகம்

சாணார்பட்டி ஒன்றியத்தில் 12 ஊராட்சிகளுக்கு காவிரி தண்ணீர் வினியோகம் செய்யும் பணி தொடங்கியது.

Update: 2018-06-21 21:34 GMT
கோபால்பட்டி,

சாணார்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில், கடந்த சில ஆண்டுகளாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. வருடத்துக்கு 8 மாத காலம் தண்ணீரை தேடி அலையும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். ஆயிரம் அடி ஆழத்துக்கு கீழ், ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டாலும் தண்ணீர் கிடைப்பதில்லை.

எனவே சாணார்பட்டி ஒன்றியத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதைக்கருத்தில் கொண்டு, காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் தண்ணீர் வினியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கான பணிகள், கடந்த 2 ஆண்டுகளாக முழுவீச்சாக நடந்தது.

சாணார்பட்டி ஒன்றிய பகுதியில் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி, மேல்நிலை நீர்த்தேக்க தெட்டிகள், வால்வுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்றது. மேலும் குடிநீர் குழாய் பதிக்கும் பணியும் நிறைவு பெற்றது. சோதனை ஓட்டம் முடிவடைந்து, சில கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் பணி தொடங்கியது. அதன்படி கடந்த 15 நாட்களாக குடிநீர் வினியோகம் நடந்து வருகிறது.

காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்துக்காக, கரூர் மாவட்டம் மாயனூரில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணை பகுதியில் உறிஞ்சுகுழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கிருந்து வடமதுரை வழியாக, சாணார்பட்டி ஒன்றிய பகுதியான அக்கரைப்பட்டிக்கு குடிநீர் குழாய் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த இடத்தில் இருந்து ஒன்றியத்தில் உள்ள 21 ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளும் குழாய்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. காவிரி ஆற்றில் இருந்து உறிஞ்சப்படுகிற தண்ணீரை சேகரித்து வைக்கும் வகையில், சிலுவத்தூரில் 3 லட்சத்து 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.

பின்னர் அங்கிருந்து பல்வேறு ஊராட்சிகளில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளிலும் ஏற்றப்படுகிற தண்ணீரின் அளவை கண்காணிக்க அளவீடு மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

வடமதுரையில் இருந்து சிலுவத்தூரில் உள்ள தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிக்கு வந்த காவிரி தண்ணீர், முதற்கட்டமாக ஒன்றியத்தில் உள்ள சிலுவத்தூர், செங்குறிச்சி, திம்மணநல்லூர், வி.எஸ்.கோட்டை, ராகலாபுரம், ராஜக்காபட்டி, மடூர், வீரசின்னம்பட்டி உள்ளிட்ட 12 ஊராட்சிகளில் காவிரி தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

சில இடங்களில், குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியது. அதனை சரிசெய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

குடிநீர் வினியோகம் குறித்து சாணார்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் மணிமுத்து (கிராம ஊராட்சி) கூறும்போது, சாணார்பட்டி ஒன்றியத்தில் இந்த மாதத்தின் முதல் வாரத்தில் இருந்து காவிரி கூட்டுக்குடிநீர் வினியோகம் தொடங்கி விட்டது. ஆனால் 21 ஊராட்சிகளுக்கும் முழுமையாக தண்ணீர் சென்றடையவில்லை. சிலுவத்தூரில் அமைக்கப்பட்டுள்ள தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீரை சேகரிக்க 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் தேவையாக உள்ளது.

தற்போது பகல் மற்றும் இரவில் சில மணி நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் கிடைக்கிறது. இதன் மூலம் குறைந்த அளவே தொட்டியில் தண்ணீர் நிரப்பப்படுகிறது. இது தொடர்பாக குடிநீர் வடிகால் வாரியத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 24 மணி நேர மும்முனை மின்சாரம் கிடைத்தவுடன், ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்றார்.

மேலும் செய்திகள்