கத்தியைக்காட்டி மிரட்டி கூலித்தொழிலாளியிடம் பணம் பறித்த 3 பேர் கைது
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை பகுதியில் கூலித்தொழிலாளியிடம் பணம் பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
படப்பை,
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை பகுதியில் உள்ள மேல்படப்பை ஆத்தனஞ்சேரி எம்.ஜி.ஆர். தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 41). கூலித்தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் மாலை படப்பை பஜார் வீதியில் நடந்து சென்றார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் மாரியப்பனை வழிமறித்து கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி ரூ.1,500-ஐ பறித்துக்கொண்டனர். மேலும், நாங்கள் எப்போது பணம் கேட்டாலும் தரவேண்டும் என மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இந்த சம்பவம் குறித்து மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்தநிலையில், மாரியப்பனை மிரட்டி பணம் பறித்ததாக கரசங்கால் பகுதியை சேர்ந்த அருண் என்கிற அருண்குமார் (24), படப்பையை சேர்ந்த ராம்குமார் (18), கீழ்படப்பையை சேர்ந்த பிரகாஷ் (20) ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் அவர்களை தாம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள அமானுல்லா என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.