மாதா கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்து விபத்து மேலும் ஒரு சிறுவன் சாவு
மாதா கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்து விபத்துக்குள்ளானதில் மேலும் ஒரு சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
கும்மிடிப்பூண்டி,
கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் அருகே உள்ள தோக்கம்பூர் காலனியில் மாதா கோவில் உள்ளது. இங்கு கடந்த மே மாதம் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி மாதாசிலை ஊர்வலம் நடைபெற்றது. அப்போது ஒரு சரக்கு ஆட்டோவில் பட்டாசுகளை வைத்து அதனை சிலர் வெடித்து கொண்டே வந்தனர். அந்த ஆட்டோவில் சிறுவர்களும், பெண்களும் அமர்ந்திருந்தனர்.
இந்த நிலையில், ஊர்வலத்தின்போது வெடிக்கப்பட்ட ராக்கெட் வெடியானது, சற்று தூரம் மேல்நோக்கி சென்று மின்வயர் மீது பட்டு மீண்டும் திரும்பி வந்து பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த ஆட்டோவில் விழுந்தது.
இதனால் ஆட்டோவில் இருந்த அனைத்து பட்டாசுகளும் ஒரே நேரத்தில் வெடித்து சிதறின. இதில் சிறுவர்கள், கல்லூரி மாணவி என மொத்தம் 7 பேர் படுகாயம் அடைந்தனர். அனைவரும் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் 3 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
சாவு
போந்தவாக்கம் கிராமத்தை சேர்ந்த தர்சிணி (வயது 10), தோக்கம்பூரை சேர்ந்த அர்ஜுன் (11), அரிஷ்பாபு (6) மற்றும் சென்னை அண்ணாநகரை சேர்ந்த காவியா (9) ஆகியோர் மட்டும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தனர்.
இவர்களில் தர்சிணி சிகிச்சை பலனின்றி கடந்த 1-ந்தேதி உயிரிழந்தார். இந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த 2-ம் வகுப்பு மாணவனான அரிஷ்பாபுவும் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தான். இதையடுத்து இந்த பட்டாசு விபத்தில் சாவு எண்ணிக்கை 2-ஆக உயர்ந்து உள்ளது.
இது தொடர்பாக ஏற்கனவே ஆரம்பாக்கம் போலீசார் ஆட்டோ டிரைவரான தோக்கம்பூரை சேர்ந்த அசோக்(23) ஆட்டோ உரிமையாளர் தசரதன்(25), கோவில் நிர்வாகியான முனுசாமி என்ற ஜோசப் (43) ஆகியோரை கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.