கலந்தாய்வு ரத்து செய்யப்பட்டதை கண்டித்து விழுப்புரத்தில் இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
கலந்தாய்வு ரத்து செய்யப்பட்டதை கண்டித்து விழுப்புரத்தில் இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்,
தமிழகம் முழுவதும் நேற்று அனைத்து மாவட்டங்களிலும் இடைநிலை கல்வி ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் இடமாறுதலுக்கான கலந்தாய்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக ஆன்-லைன் மூலம் ஆசிரியர்கள் விண்ணப்பித்திருந்தனர்.
விழுப்புரத்தில் ஒரு தனியார் பள்ளியில் இடைநிலை ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடைபெறுவதாக இருந்தது. இதில் கலந்துகொள்ள விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்தும் 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வந்திருந்தனர். கலந்தாய்வு நடத்த கல்வித்துறை அதிகாரிகளும் வந்திருந்தனர்.
இந்நிலையில் காலை 10 மணியளவில் திடீரென விழுப்புரம், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், ஈரோடு உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மாணவர்களின் நலன் கருதியும், காலிப்பணியிடம் அதிகமாக இருப்பதால் இந்த மாவட்டங்களில் கலந்தாய்வு கிடையாது என அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டது.
இதை பார்த்து இடைநிலை ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து, பள்ளி கல்வித்துறையின் இந்த அறிவிப்பை கண்டித்து அவர்கள், அப்பள்ளியின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கூறுகையில், நாங்கள் வெளிமாவட்டத்தில் இருந்து வந்து இங்கு பணியாற்றி வருகிறோம். தற்போது அங்கு அதிகளவு காலிப்பணியிடம் இருந்தும் கலந்தாய்வை ரத்து செய்து விட்டனர். தற்போது அந்த பணியிடங்களில் பணம் கொடுத்து சிபாரிசில் செல்பவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனால்தான் கலந்தாய்வை ரத்து செய்துள்ளதாக குற்றம் சாட்டினார்கள்.