ரேஷன் கடையில் கூட்டநெரிசலில் சிக்கி 4 பேர் மயக்கம்: விருத்தாசலம் அருகே பரபரப்பு
விருத்தாசலம் அருகே ரேஷன் கடையில் பொருட்களை வாங்க முண்டியடித்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் மயங்கி விழுந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
விருத்தாசலம்,
விருத்தாசலம் அருகே கோ.பூவனூர் சுமைதாங்கி பகுதியில் ரேஷன் கடை இயங்கி வருகிறது. இக்கடையில் கோ.பூவனூர், சுமைதாங்கி, ஸ்ரீராம் நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 650-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் அரிசி, பருப்பு, மண்எண்ணெய், சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாங்கி, பயன் அடைந்து வருகிறார்கள். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இந்த ரேஷன் கடைக்கு வரும் பொதுமக்களுக்கு சரியான முறையில் பொருட்கள் விற்பனை செய்வது இல்லை என்று புகார் எழுந்தது. மேலும் கடை திறக்கும்போது வரும் பொதுமக்களுக்கு மட்டுமே பொருட்கள் வழங்கப்படுவதாகவும், மதியத்துக்கு பிறகு வரும் பொதுமக்களுக்கு பொருட்கள் தீர்ந்து விட்டது என கூறி கடை ஊழியர்கள் திருப்பி அனுப்பி விடுவதாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில் வழக்கம்போல் நேற்று காலை ரேஷன் கடை திறக்கப்பட்டது. இதையறிந்த பொதுமக்கள் 200-க்கும் மேற்பட்டோர் பொருட்கள் வாங்குவதற்காக ஒரே நேரத்தில் கடை முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் ஒருவரையொருவர் முண்டியடித்துக் கொண்டு பொருட்களை வாங்க முயன்றனர். அப்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கிய அதேபகுதியை சேர்ந்த சரசு, துர்கா, மலர், சரவணன் உள்ளிட்ட 4 பேர் திடீரென மயங்கி விழுந்தனர். இதைபார்த்து, அதிர்ச்சியடைந்த அருகில் இருந்தவர்கள் அவர்கள் 4 பேர் மீதும் தண்ணீர் தெளித்தனர். மேலும் அவர்களை அருகே உள்ள அங்கன்வாடி மையத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் மயக்கம் தெளிந்ததும் பொருட்களை வாங்கி கொண்டு அங்கிருந்து தங்கள் வீடுகளுக்கு சென்றனர்.
இதுபற்றி தகவல் அறிந்த மக்கள் அதிகாரம் அமைப்பு நிர்வாகி பாலு மற்றும் பொதுமக்கள் ரேஷன்கடை முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் சீரானமுறையில் அனைவருக்கும் பொருட்கள் வினியோகம் செய்ய வேண்டும், கூடுதலாக பகுதி நேர ரேஷன் கடை திறக்க வேண்டும் என கண்டன கோஷங்கள் எழுப்பியபடி ரேஷன்கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் சீராக பொருட்கள் வழங்க சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதனை ஏற்ற பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர்.