இரணியல் அருகே பரிதாபம்: ரப்பர் தடிகளை ஏற்றி சென்ற லாரி குளத்தில் பாய்ந்தது; டிரைவர் பலி

இரணியல் அருகே அதிகாலையில் ரப்பர் தடிகளை ஏற்றி சென்ற லாரி குளத்தில் பாய்ந்தது. இந்த விபத்தில் டிரைவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2018-06-21 23:00 GMT
திங்கள்சந்தை,

மணவாளக்குறிச்சி அருகே சக்கப்பத்து பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 50), லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு குலசேகரத்தில் இருந்து லாரியில் ரப்பர் தடிகளை ஏற்றிக்கொண்டு நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் நோக்கி புறப்பட்டார். அதிகாலை 2 மணியளவில் இரணியல் அருகே கண்ணாட்டுவிளை பகுதியில் குளத்தின் கரையோரமாக சென்று கொண்டிருந்தார். அப்போது லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

திடீரென சாலையோரம் இருந்த குளத்தில் பாய்ந்து கவிழ்ந்தது. இதில் டிரைவர் சேகர் குளத்துக்குள் தூக்கி வீசப்பட்டார். கண்ணிமைக்கும் நேரத்தில் லாரியில் இருந்த ரப்பர் தடிகள் அவர் மீது விழுந்தன. இதில் நீந்தி தப்பி செல்ல முடியாத நிலையில் தண்ணீரில் மூழ்கி மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தார்.

இதற்கிடையே சத்தம் கேட்டு அருகே வீட்டில் தூங்கி கொண்டிருந்தவர்கள் கண்விழித்து வெளியே வந்து பார்த்தனர். அப்போது, குளத்துக்குள் லாரி கவிழ்ந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து இரணியல் போலீசாருக்கும், தக்கலை தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று குளத்துக்குள் கவிழ்ந்து கிடந்த லாரியை மீட்க முயன்றனர். லாரியில் மரத்தடிகள் இருந்ததால் உடனடியாக அதை மீட்க முடியவில்லை.

இதையடுத்து ராட்சத கிரேன் வரவழைக்கப்பட்டு லாரியை மீட்டனர். தொடர்ந்து நீண்ட நேரம் போராடி குளத்தில் இருந்து டிரைவர் சேகர் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இதற்கிடையே லாரி கவிழ்ந்த தகவல் அறிந்ததும் சேகரின் உறவினர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் சம்பவ இடத்தில் கூடினர். சேகரின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

இறந்தவரின் உடலை இரணியல் போலீசார் கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்து குறித்து இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த சேகருக்கு மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். 

மேலும் செய்திகள்