8 வழி பசுமை சாலை திட்டம் குறித்து கருத்து கேட்பு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்த விவசாயிகள் சங்க தலைவர்கள் 2 பேர் கைது

திருவண்ணாமலையில் விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர், துணைத்தலைவர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-06-20 22:48 GMT
திருவண்ணாமலை,

சென்னை - சேலம் இடையே காஞ்சீபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் ஆகிய 5 மாவட்டங்கள் வழியாக புதிதாக 8 வழி பசுமை சாலை ரூ.10 ஆயிரம் கோடியில் அமைக்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு விவசாய நிலம் கையகப்படுத்தப்படும் பகுதியில் உள்ள விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில், 8 வழி பசுமை சாலை திட்டம் குறித்து விவசாயிகளிடம் கருத்து கேட்கும் கலந்துரையாடல் கூட்டம் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி அருகே உள்ள மணிலா ஆலை வளாகத்தில் நேற்று நடத்தப்படுவதாக விவசாயிகள் அறிவித்திருந்தனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு நோட்டீசும் அனுப்பி இருந்தனர். கலந்துரையாடல் கூட்டம் நடத்தப்படுவதாக இருந்த இடத்தில் நேற்று காலை முதலே போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் டி.கே.வெங்கடேசன், துணைத் தலைவர் பலராமன் இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், கூட்டத்திற்கு வந்தவர்களை போலீசார் விரட்டி அடித்ததாக கூறப்படுகிறது.

22 பேரை பிடித்து சென்ற போலீசார்

இதையடுத்து விவசாயிகளின் கருத்தை கேட்பதற்காக திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் விவசாய சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாநில பொது செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த கலசபாக்கம் அருகே உள்ள சாலையனூர் பகுதியை சேர்ந்த ஏழுமலை, சங்கர், சேகர், காம்பட்டை சேர்ந்த சீனிவாசன், செல்வராஜ், விஜி, பவுன்குமார் உள்பட 22 விவசாயிகளை போலீசார் போளூர் சாலையிலேயே தடுத்து கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

அரசின் அடக்குமுறை

பின்னர் தமிழ்நாடு விவசாய சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகம் திருவண்ணாமலையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் தலைவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் கூட்டத்திற்கு வருபவர்களையும் பிடித்து கைது செய்வது தமிழக அரசின் அடக்கு முறையாகும். இதனை தமிழக அரசு கைவிட வேண்டும்.

இந்த திட்டம் அமையும் முன்பே விவசாயிகளிடம் அரசு கருத்து கேட்டு இருக்க வேண்டும். இந்த திட்டத்தினால் 7,500 ஏக்கர் விவசாய நிலங்களும், 1,000 ஏக்கர் வனப்பகுதியும் அழிக்கப்படும். திருவண்ணாமலை மாவட்டம் விவசாயத்தை சார்ந்த மாவட்டம். இத்திட்டத்தினால் விவசாயிகள் பலர் தங்களது நிலம், வீட்டை இழக்கிறார்கள். அரசு தரும் இழப்பீடு பயன் அளிக்காது.

போராட்டம்

இந்த திட்டத்தை அரசு கைவிட வேண்டும். நாங்கள் இதுதொடர்பாக நீதிமன்றத்தை நாடப்போவதில்லை. அரசு இதனை கைவிடவில்லை என்றால் பாதிக்கப்படும் விவசாயிகளை ஒன்றிணைத்து போராடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

விவசாயிகள் சாலை மறியல்

கூட்டம் முடிந்த பின்னர் விவசாயிகள் அனைவரும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் செல்ல போளூர் சாலைக்கு திரண்டு வந்தனர். அங்கு ஏற்கனவே குவிக்கப்பட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

போலீசார் தடுத்ததால் விவசாயிகள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையின் போது, விவசாயிகள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை சந்திக்க போலீசார் அனுமதி வழங்குவதாக கூறினர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் சாலையோரம் சென்றனர்.

விவசாய சங்க நிர்வாகிகள் 5 பேர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னியை சந்தித்து, கைது செய்யப்பட்ட 24 பேரையும் விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அவர்களை விடுதலை செய்வதாக போலீஸ் சூப்பிரண்டு கூறினார். இதையடுத்து அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். பின்னர் விவசாயிகள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்