அந்தேரியில் இளம்பெண்ணை கடத்தி கற்பழித்த நடன கலைஞர் கைது

அந்தேரியில் இளம்பெண்ணை கடத்தி கற்பழித்த நடன கலைஞரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-06-20 22:32 GMT
மும்பை, 

அந்தேரியில் இளம்பெண்ணை கடத்தி கற்பழித்த நடன கலைஞரை போலீசார் கைது செய்தனர்.

நடன கலைஞர்

மும்பை அந்தேரியை சேர்ந்தவர் ஆதித்ய குப்தா(வயது20). நடன கலைஞர். டெலிவிஷன் ரியாலிட்டி நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்று உள்ளார். இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன் இன்ஸ்டாகிராம் மூலம் 17 வயது இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.

இதனையடுத்து அந்த இளம்பெண்ணை அந்தேரிக்கு வரவழைத்து நேரில் சந்தித்தார். பின்னர் அவரை நாலச்சோப்ராவுக்கு அழைத்து சென்று இருக்கிறார்.

இளம்பெண் கற்பழிப்பு

அங்கு ஒரு அறைக்கு அழைத்து சென்ற ஆதித்ய குப்தா இளம்பெண்ணுக்கு சாப்பிட வழங்கிய உணவில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து அவரை கற்பழித்ததாக கூறப்படுகிறது.

பின்னர் பாதி மயக்கம் தெளிந்த நிலையில், இரவு அந்த இளம்பெண்ணை அந்தேரி பகுதியில் விட்டு விட்டு சென்றுவிட்டார்.

இதற்கிடையே மகளை காணாமல் பதறிப்போன இளம்பெண்ணின் பெற்றோர் மகள் கடத்தப்பட்டுள்ளதாக டி.என்.நகர் போலீசில் புகார் கொடுத்தனர்.

கைது

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர். இந்தநிலையில் மறுநாள் காலை அந்த இளம்பெண் அந்தேரி மேற்கு ரெயில் நிலைய பகுதியில் பாதி மயக்க நிலையிலேயே மீட்கப்பட்டார். உடனடியாக அவர் சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு மயக்கம் தெளிந்த பின்னர், இளம்பெண் நடந்த சம்பவங்களை கூறினார். அதன்பேரில் போலீசார் ஆதித்ய குப்தா மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

விசாரணையின் போது, அவர் இளம்பெண்ணை கடத்தி கற்பழித்ததை ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்