வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட 1,148 பஸ் ஊழியர்கள் பணி நீக்கம் மராட்டிய அரசு போக்குவரத்து கழகம் அதிரடி
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட 1,148 பஸ் ஊழியர்களை அரசு போக்குவரத்து கழகம் அதிரடியாக பணி நீக்கம் செய்து உள்ளது.
மும்பை,
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட 1,148 பஸ் ஊழியர்களை அரசு போக்குவரத்து கழகம் அதிரடியாக பணி நீக்கம் செய்து உள்ளது.
பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம்
மராட்டிய அரசு போக்குவரத்து கழகம் நாட்டின் மிகப்பெரிய போக்குவரத்து கழகம் ஆகும். 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். சம்பள உயர்வு கோரி அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் ஒரு பகுதியினர் கடந்த 8-ந்தேதி திடீரென வேலை நிறுத்தத்தில் குதித்தனர். யூனியன்கள் சார்பில் அறிவிக்கப்படாத இந்த வேலை நிறுத்தம் 2-வது நாளாக 9-ந்தேதியும் நீடித்தது.
எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்ததால் மாநிலம் முழுவதும் அரசு பஸ் சேவைகள் பாதிக்கப்பட்டன. மொத்தம் உள்ள 250 டெப்போக்களில் 74 டெப்போக்களில் பஸ் சேவைகள் முற்றிலுமாக முடங்கின.
மாநிலத்தின் அனைத்து இடங்களிலும் பயணிகள் பரிதவித்தனர். இதன் காரணமாக போக்குவரத்து கழகத்திற்கு இந்த 2 நாட்களில் மட்டும் ரூ.33 கோடி நஷ்டம் ஏற்பட்டது.
1,148 பேர் பணி நீக்கம்
போக்குவரத்து துறை மந்திரி திவாகர் ராவ்தே பஸ் ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். இந்தநிலையில், போக்குவரத்து கழகம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட பஸ் ஊழியர்கள் 1,148 பேரை அதிரடியாக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளது.
இவர்கள் அனைவரும் போக்குவரத்து கழகத்தில் பணிபுரிய புதிதாக நியமிக்கப்பட்டு இருந்த டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் ஆவர். பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் 138 பேர் மும்பை கோட்டத்தில் பணிபுரிந்து வந்தவர்கள் என கூறப்படுகிறது.
போக்குவரத்து பாதிக்காது
இதுபற்றி போக்குவரத்து கழக மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் புதிதாக ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டவர்கள்.
இவர்களுக்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.17 ஆயிரம் வரை நல்ல ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் அவர்கள் ரூ.10 ஆயிரம் தான் சம்பளமாக வாங்குவதாக கூறி, சம்பள உயர்வுகேட்டு வந்தனர்.
2 நாட்கள் நடந்த வேலை நிறுத்தத்தை எந்த ஒரு யூனியனும் அறிவிக்கவில்லை. இவர்களே பஸ்களை இயக்க மறுத்து வேலை நிறுத்தம் செய்தனர்.
பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு பதிலாக காத்திருப்பு பட்டியலில் இருப்பவர்கள் உடனடியாக பணியில் சேர்க்கப்படுவார்கள். எனவே இவர்களை பணி நீக்கம் செய்ததால் பஸ் போக்குவரத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது.
இவ்வாறு அவர் கூறினார்.
அதே நேரத்தில் ஊழியர்களை பணி நீக்கம் செய்த உத்தரவை போக்குவரத்து கழகம் உடனடியாக திரும்ப பெறவேண்டும். இ்ல்லையெனில் போராட்டங்களில் ஈடுபடுவோம் என அரசு போக்குவரத்து கழகத்தின் சில யூனியன்கள் எச்சரித்து உள்ளன.