வீட்டுக்கு வரும்படி நடிகர் சுதீப் விடுத்த அழைப்பை ஏற்று மாயமான 9–ம் வகுப்பு மாணவன் மனம் திருந்தி வீட்டுக்கு வந்தான்
மாயமான 9–ம் வகுப்பு மாணவன், வீட்டுக்கு வரும்படி நடிகர் சுதீப் விடுத்த அழைப்பை ஏற்று வீட்டுக்கு வந்தான். அவனை திருப்பதி சென்று பெற்றோர் அழைத்து வந்தனர்.
பெங்களூரு,
மாயமான 9–ம் வகுப்பு மாணவன், வீட்டுக்கு வரும்படி நடிகர் சுதீப் விடுத்த அழைப்பை ஏற்று வீட்டுக்கு வந்தான். அவனை திருப்பதி சென்று பெற்றோர் அழைத்து வந்தனர்.
9–ம் வகுப்பு மாணவன் மாயம்பெங்களூரு கிரிநகரில் வசித்து வருபவன் 16 வயது சிறுவன். தனியார் பள்ளி ஒன்றில் 9–ம் வகுப்பு படித்து வரும் மாணவன் நடிகர் சுதீப்பின் தீவிர ரசிகன். டியூசனுக்கு சரியாக செல்லாததால் மாணவனை, அவனுடைய பெற்றோர் திட்டினர். இதனால் மனம் உடைந்த மாணவன் கடந்த மே மாதம் 20–ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றான். மீண்டும் வீடு திரும்பாததால் மகன் மாயமாகி உள்ளதாக கிரிநகர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில், போலீசார் விசாரணையை தொடங்கினர்.
இதற்கிடையே, மாணவன் மாயமான விவரம் குறித்து அறிந்த நடிகர் சுதீப், மாணவனுக்காக ஒரு வீடியோ பதிவை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டார். அதில் பேசும் நடிகர் சுதீப், ‘பெற்றோர்களிடம் ஏற்படும் பிரச்சினை உன்மீதான அவர்களின் அன்பை குறைக்காது. தயவுசெய்து வீட்டுக்கு திரும்பி வந்துவிடு’ என்று மாணவனின் பெயரை குறிப்பிட்டு வீடியோ வெளியிட்டு இருந்ததோடு, வீட்டுக்கு வந்தால் உன்னை நேரில் சந்திப்பதாகவும் அவர் கூறியிருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.
சுதீப் அழைப்பை ஏற்று வீடு திரும்பினான்இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடகத்தை சேர்ந்த ஒருவர் திருப்பதிக்கு சென்றார். அங்கு அவர் மாயமான மாணவனை பார்த்து அவரிடம் நைசாக பேசி அவருடைய வீட்டு செல்போன் எண்ணை பெற்று அவன் பற்றிய விவரங்களை அளித்தார். மேலும் நடிகர் சுதீப் மாணவன் பற்றி பேசிய வீடியோவும் அவனிடம் காண்பிக்கப்பட்டது. இதையடுத்து நடிகர் சுதீப் விடுத்த அழைப்பை ஏற்று, மாணவன் வீட்டுக்கு வர சம்மதம் தெரிவித்தான்.
இதுபற்றி தகவல் அறிந்த அவனது பெற்றோர், திருப்பதி சென்று மாணவனை பத்திரமாக மீட்டு வந்தனர். இதையடுத்து மீட்கப்பட்ட மாணவனுடன், அவனுடைய தாய் நடிகர் சுதீப்புக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பான வீடியோவும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
விரைவில் சந்திப்புநடிகர் சுதீப் விடுத்த அழைப்பை ஏற்று மாயமான மாணவன் வீடு திரும்பிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் அந்த மாணவனை நடிகர் சுதீப் சந்தித்து பேச இருப்பதாக கூறப்படுகிறது.