பட்ஜெட் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம்: என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. புறக்கணிப்பு

புதுவை மாநிலத்தின் பட்ஜெட் தொடர்பாக முதல்–அமைச்சர் நாராயணசாமி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற்றது.

Update: 2018-06-20 23:30 GMT

புதுச்சேரி,

புதுவை மாநில பட்ஜெட் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு முதல்–அமைச்சர் நாராயணசாமி அழைப்பு விடுத்து இருந்தார். புதுவை தலைமை செயலகத்தில் உள்ள கருத்தரங்க கூடத்தில் நேற்று மாலை இந்த கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முதல்–அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார். சாபநாயகர் வைத்திலிங்கம், அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், தீப்பாய்ந்தான், எம்.என்.ஆர்.பாலன், விஜயவேணி, ஜெயமூர்த்தி, தி.மு.க. எம்.எல்.ஏ. சிவா, டெல்லி சிறப்பு பிரதிநிதி ஜான்குமார்.

தி.மு.க. வடக்கு மாநில அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் சலீம், மூத்த தலைவர்கள் விஸ்வநாதன், நாரா.கலைநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பிரதேச செயலாளர் ராஜாங்கம், முன்னாள் செயலாளர் பெருமாள், விடுதலை சிறுத்தைகள் முதன்மை செயலாளர் தேவ.பொழிலன், ராஷ்டிரீய ஜனதா தளம் தலைவர் சஞ்சீவி, திராவிட விடுதலை கழக தலைவர் சிவ.வீரமணி, புதியநீதி கட்சி பொன்னுரங்கம் மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதில் தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், வளர்ச்சி ஆணையர் அன்பரசு உள்பட அரசு செயலர்கள் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தை தொடங்கி வைத்து முதல்–அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:–

புதுச்சேரியில் தனிக்கணக்கு தொடங்கிய பிறகு நிதி நிலை பாதிக்கப்பட்டது. நிதியை பெருக்க அனைவரும் தங்களுடைய கருத்தை தெரிவிக்கலாம். புதுவை அரசுக்கு வணிகவரித்துறை, கலால், பத்திரப்பதிவு, மின்சாரம், சுற்றுலா ஆகிய துறைகளில் வருவாய் வருகிறது. இந்த துறைகளில் மேலும் வருமானத்தை பெருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

புதுச்சேரி அரசு வெளிப்படையான நிர்வாகத்தை வழங்க நினைக்கிறோம். அரசின் தவறுகளை சுட்டிக்காட்டலாம். நாங்கள் திருத்திக்கொள்ள தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.

அதைத்தொடர்ந்து கூட்டத்தில் கலந்துகொண்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பட்ஜெட் தொடர்பாக தங்களில் கருத்துகளையும், அரசின் மீது உள்ள குறைகளை தெரிவித்தனர்.

முதல்–அமைச்சர் நாராயணசாமி அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தபோதே இந்த கூட்டத்தை என்.ஆர்.காங்கிரஸ் புறக்கணிப்பதாக அக்கட்சியின் தலைவர் ரங்கசாமியும், அதேபோல் அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ.வும் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதன்படி அனைத்து கட்சி கூட்டத்தில் என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க., பாரதீய ஜனதா கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தனர்.

மேலும் செய்திகள்