அவன் இவன் படத்தில் சிங்கம்பட்டி ஜமீனை விமர்சித்ததாக வழக்கு: இயக்குனர் பாலா, நடிகர் ஆர்யா அம்பை கோர்ட்டில் ஆஜர்

இயக்குனர் பாலா, நடிகர் ஆர்யா, தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் ஆகியோர் அம்பை கோர்ட்டில் நேற்று ஆஜரானார்கள்.

Update: 2018-06-20 21:00 GMT

அம்பை, 

‘அவன் இவன்‘ படத்தில் சிங்கம்பட்டி ஜமீன், காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் பற்றி விமர்சித்ததாக தொடரப்பட்ட வழக்கில் இயக்குனர் பாலா, நடிகர் ஆர்யா, தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் ஆகியோர் அம்பை கோர்ட்டில் நேற்று ஆஜரானார்கள்.

சிங்கம்பட்டி ஜமீன் பற்றி விமர்சனம்

நடிகர்கர் ஆர்யா, விஷால் இணைந்து நடித்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த படம் ‘அவன் இவன்‘. இந்த படத்தை கல்பாத்தி அகோரம் தயாரிப்பில், இயக்குனர் பாலா இயக்கி இருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம், அம்பை, காரையாறு சுற்றுவட்டார பகுதியில் நடந்தது.

இந்த படத்தில் சிங்கம்பட்டி ஜமீன் பற்றியும், காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் குறித்தும் அவதூறாக விமர்சித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அம்பை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சிங்கம்பட்டி ஜமீன்தார் தீர்த்தபதிராஜா மகன் சங்கர் ஆத்மஜன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த ஒரு ஆண்டாக நடைபெற்று வருகிறது.

கடந்த மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது ஜூன் மாதம் 20–ந் தேதி நடிகர் ஆர்யா, இயக்குனர் பாலா, தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என்று அம்பை கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து இருந்தது.

கோர்ட்டில் ஆஜர்

அதன்படி இந்த வழக்கின் விசாரணை நேற்று அம்பை கோர்ட்டில் நடந்தது. ஆர்யா, பாலா, கல்பாத்தி அகோரம் ஆகியோர் கோர்ட்டில் ஆஜரானார்கள். வழக்கை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முரளிதரன் விசாரித்தார். அப்போது, 3 பேரிடமும் குற்றப்பத்திரிக்கையின் நகல் வழங்கப்பட்டது. பின்னர் வழக்கை நாளை (வெள்ளிக்கிழமை)க்கு நீதிபதி முரளிதரன் ஒத்திவைப்பதாக அறிவித்தார். இதையடுத்து அவர்கள் 3 பேரும் அங்கு இருந்து புறப்பட்டு சென்றனர்.

மேலும் இந்த படத்தில் சிங்கம்பட்டி ஜமீன், சொரிமுத்து அய்யனார் கோவில் பற்றி நடிகர் விஷால் பேசாததால் அவர் மீது வழக்கு தொடரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்