சமூக ஆர்வலர் பியூஸ் மானுஸ் சேலம் சிறையில் அடைப்பு ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனுத்தாக்கல்

8 வழி பசுமை சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசியதாக கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர் பியூஸ் மானுஸ் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Update: 2018-06-19 23:30 GMT
ஓமலூர்,

சேலம் விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓமலூர் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் ஆலோசனை கூட்டங்கள் நடத்தி வருகின்றனர். அதன்படி கடந்த மாதம் 3-ந் தேதி தும்பிபாடி மாரியம்மன் கோவில் பகுதியில் நடந்த கூட்டத்தில் நடிகர் மன்சூர் அலிகான், சமூக ஆர்வலர் பியூஸ் மானுஸ் ஆகியோர் பங்கேற்று பேசினர்.

அப்போது அவர்கள் இந்த திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்தும், சேலம்-சென்னை இடையே அமைய உள்ள 8 வழி பசுமை சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பேசினர். இதையடுத்து அவர்கள் இருவர் மீதும் 4 பிரிவுகளில் தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். கடந்த 17-ந் தேதி இந்த வழக்கு தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகானை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

இதனிடையே நேற்று முன்தினம் இரவு ஆர்.சி.செட்டிப்பட்டி பிரிவு ரோடு அருகே சமூக ஆர்வலர் பியூஸ் மானுசை தீவட்டிப்பட்டி போலீசார் இந்த வழக்கு தொடர்பாக கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவருடைய மனைவி மோனிகா மற்றும் குடும்பத்தினர் போலீஸ் நிலையத்துக்கு வந்து பியூஸ் மானுசை பார்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தி போலீஸ் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அவரது உறவினர் ஒருவர் மட்டும் பார்க்க அனுமதிக்கப்பட்டார். பின்னர் போலீசார் விசாரணைக்கு பிறகு நள்ளிரவில் பியூஸ் மானுஸ் ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்டார். அங்கிருந்து ஓமலூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு ரமேஷ் வீட்டில் அவர் முன்பு பியூஸ் மானுஸ் ஆஜர்படுத்தப்பட்டு, அதிகாலையில் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

முன்னதாக பியூஸ் மானுசின் மனைவி மோனிகா தனது கணவர் கைது செய்யப்பட்டது குறித்து நிருபர்களிடம் கூறும்போது, ‘எனது கணவருக்கு சிறையில் பாதுகாப்பு இல்லை. ஏற்கனவே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அவர் கைது செய்யப்பட்ட போது சிறையில் வைத்து தாக்கப்பட்டார். எனவே எனது கணவருக்கு சிறையில் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என்றார்.

இதனிடையே பியூஸ் மானுசுக்கு ஜாமீன் கேட்டு ஓமலூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வக்கீல் பவானி மோகன் நேற்று மனு தாக்கல் செய்தார். இந்த மனு நாளை(வியாழக்கிழமை) விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்