சதீஷ் ஜார்கிகோளி எம்.எல்.ஏ.வுக்கு மந்திரி பதவி வழங்க கோரி ஆர்ப்பாட்டம் மண்டியாவில், ஆதரவாளர்கள் நடத்தினர்
சதீஷ் ஜார்கிகோளி எம்.எல்.ஏ.வுக்கு மந்திரி பதவி வழங்க கோரி, மண்டியாவில் அவரது ஆதரவாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மண்டியா,
சதீஷ் ஜார்கிகோளி எம்.எல்.ஏ.வுக்கு மந்திரி பதவி வழங்க கோரி, மண்டியாவில் அவரது ஆதரவாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சதீஷ் ஜார்கிகோளி எம்.எல்.ஏ.பெலகாவி மாவட்டம் எமகனமரடி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டவர் சதீஷ் ஜார்கிகோளி. இவர் முன்னாள் முதல்–மந்திரி சித்தராமையாவின் மந்திரிசபையில் மந்திரியாக பணியாற்றியவர்.
இந்த நிலையில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கூட்டணி ஆட்சியில் தனக்கு மந்திரி பதவி கிடைக்கும் என்று சதீஷ் ஜார்கிகோளி எதிர்பார்த்தார். ஆனால் அவருக்கு மந்திரி பதவி கிடைக்கவில்லை. மாறாக அவரின் அண்ணணும், முன்னாள் மந்திரியுமான ரமேஷ் ஜார்கிகோளிக்கு மந்திரி பதவி கிடைத்தது. மந்திரி பதவி கிடைக்காததால் சதீஷ் ஜார்கிகோளி காங்கிரஸ் மேலிடம் மீது கடும் அதிருப்தி அடைந்தார். மேலும் அவர் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் பதவியையும் ராஜினாமா செய்தார். காங்கிரசில் இருந்து விலக போவதாகவும் அறிவித்தார்.
ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்இதனை தொடர்ந்து அவர் முதல்–மந்திரி குமாரசாமியை சந்தித்து பேசினார். இதனால் அவர் ஜனதாதளம்(எஸ்) கட்சியில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் சதீஷ் ஜார்கிகோளி எம்.எல்.ஏ.வுக்கு காங்கிரஸ் மேலிடம் மந்திரி பதவி அல்லது மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று மண்டியா டவுன் மைசூரு–பெங்களூரு சாலையில் உள்ள விசுவேஸ்வரய்யா சிலை முன்பு சதீஷ் ஜார்கிகோளியின் உருவப்படத்தை கையில் வைத்து கொண்டு அவரது ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது சதீஷ் ஜார்கிகோளி எம்.எல்.ஏ.வுக்கு மந்திரி பதவி கிடைக்க துணை முதல்–மந்திரி பரமேஸ்வர் கட்சி மேலிடத்திடம் பரிந்துரை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களையும் எழுப்பினர். இதுபற்றி அறிந்த மண்டியா டவுன் போலீசார் அங்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆதரவாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த ஆர்ப்பட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.