பட்ஜெட் தாக்கல் செய்வது தொடர்பாக குமாரசாமிக்கும், சித்தராமையாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு இல்லை மந்திரி ரேவண்ணா பேட்டி

பட்ஜெட் தாக்கல் செய்வது தொடர்பாக குமாரசாமிக்கும், சித்தராமையாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு இல்லை என்று மந்திரி ரேவண்ணா கூறினார்.

Update: 2018-06-19 22:00 GMT

மங்களூரு, 

பட்ஜெட் தாக்கல் செய்வது தொடர்பாக குமாரசாமிக்கும், சித்தராமையாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு இல்லை என்று மந்திரி ரேவண்ணா கூறினார்.

சார்மடி மலைப்பாதையில் ஆய்வு

பெங்களூரு–மங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சார்மடி மலைப்பாதையில் சாலை சீரமைப்பு பணிகள் நடந்து வந்தன. அந்த பணிகள் இந்த மாத தொடக்கத்திலேயே முடிவடையும் நிலையில் இருந்தது. ஆனால் தென்மேற்கு பருவமழையால் அந்த சாலையில் மண் சரிவு ஏற்பட்டது.

இதில் சாலை பணிகளை முடிப்பதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று சார்மடி மலைப்பாதையில் கர்நாடக பொதுப்பணித்துறை மந்திரி ரேவண்ணா ஆய்வு மேற்கொண்டார்.

கருத்து வேறுபாடு இல்லை

இதனையடுத்து பெல்தங்கடி தாலுகா தர்மஸ்தலாவில் யோகா மற்றும் ஆயுர்வேத மையத்தில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் முதல்–மந்திரி சித்தராமையாவை சந்தித்து ரேவண்ணா பேசினார். இதன்பின்னர் மங்களூருவில் நிருபர்களுக்கு ரேவண்ணா பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

புதிய அரசு பொறுப்பேற்ற பின்னர் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கமான ஒன்று தான். பட்ஜெட் தாக்கல் செய்வது தொடர்பாக முன்னாள் முதல்–மந்திரி சித்தராமையாவுக்கும், குமாரசாமிக்கும் இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை. பட்ஜெட் தாக்கல் செய்வது குறித்து சித்தராமையா தனது கருத்தை கூறினார்.

மக்களுக்கு உகந்த பட்ஜெட்டை குமாரசாமி தாக்கல் செய்வார். தர்மஸ்தலாவில் ஆயுர்வேத மையத்தில் சிகிச்சை பெற்று வரும் சித்தராமையாவை சந்தித்து நலம் விசாரித்தேன். அவரிடம் ஆட்சி குறித்து எதுவும் பேசவில்லை. டெல்லிக்கு சென்ற போதும் ராகுல் காந்தியை சந்தித்து பேசினேன். அவர் கர்நாடகத்தில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள கவனம் செலுத்துங்கள் என்று என்னிடம் கூறினார்.

ரூ.250 கோடி நிதி

சிராடி மலைப்பாதையில் மண் சரிந்து விழுந்து உள்ளதால் சாலை பணிகளில் தொய்வு ஏற்பட்டு உள்ளது. அங்கு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

அடுத்த மாதம்(ஜூலை) முதல் வாரத்தில் சிராடி மலைப்பாதையில் போக்குவரத்து தொடங்கும். கர்நாடகத்தில் உள்ள மலைப்பாதைகளை விரிவாக்கம் செய்ய ரூ.250 கோடி நிதியாக ஒதுக்க மத்திய அரசிடம் கேட்டு உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்