கொலை வழக்கில் இன்று தீர்ப்பு: தூக்குப் போட்டு ரவுடி தற்கொலை

கொலை வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில் அதற்கு பயந்து ஒரு ரவுடி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2018-06-19 23:30 GMT

புதுச்சேரி,

புதுவை குரும்பாபேட் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் ராகுல் என்கிற மணிகண்டன்(வயது 26). பிரபல ரவுடி. இவர் மீது, கடந்த 2011–ம் ஆண்டு திலாசுபேட்டையில் முன்னாள் முதல்–அமைச்சர் ரங்கசாமி வீட்டின் அருகே நடந்த நொண்டி ஆறுமுகம் கொலை வழக்கு, 2013–ம் ஆண்டு நடைபெற்ற பொய்யாகுளம் வாலிபர் சசிந்தரன் கொலை வழக்கு, காரைக்கால் சாராய வியாபாரி ராமு கொலை வழக்கு உள்பட 8க்கும் மேற்பட்ட அடிதடி வழக்குகள் உள்ளன.

இந்த கொலை வழக்குகள் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த அவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். சசிந்தரன் கொலைவழக்கு விசாரணை புதுவை கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் ரவுடி மணிகண்டன் கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு தேவி(20) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதன் பின்னர் அவர் மனம் திருந்தி வாழ்ந்து வந்தார். அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு 1½ வயதில் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் மணிகண்டன் நேற்று முன்தினம் இரவு மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனை அவரது மனைவி கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனையுடன் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் அனைவரும் தூங்கிய பின்னர் மணிகண்டன் தனது மனைவியின் துப்பட்டாவால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சசிந்தரன் கொலை வழக்கில் விசாரணை முடிவடைந்து இன்று (புதன்கிழமை) தீர்ப்பு வெளியாக உள்ளது. இந்த தீர்ப்பால் தனக்கு என்னவாகுமோ என்று மணிகண்டன் பயந்துகொண்டே இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்