பாளையங்கோட்டையில் கலந்தாய்வு: உடற்கல்வி, இசை ஆசிரியர்கள் 19 பேருக்கு இடமாறுதல் உத்தரவு

பாளையங்கோட்டையில் நேற்று நடந்த கலந்தாய்வில் 19 உடற்கல்வி, இசை ஆசிரியர்களுக்கு இடமாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது.

Update: 2018-06-19 20:30 GMT

நெல்லை, 

பாளையங்கோட்டையில் நேற்று நடந்த கலந்தாய்வில் 19 உடற்கல்வி, இசை ஆசிரியர்களுக்கு இடமாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது.

கலந்தாய்வு

நெல்லை மாவட்டத்தில் பணியாற்றும் உடற்கல்வி, இசை, கலை, தையல் ஆசிரியர்களுக்கான இட மாறுதல் கலந்தாய்வு நேற்று பாளையங்கோட்டை சாராள் தக்கர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. காலையில் சர்வர் இணைப்பு கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. நீண்ட நேரத்துக்கு பிறகு இணைப்பு கிடைத்து கலந்தாய்வு நடைபெற்றது. இந்த கலந்தாய்வில் வருவாய் மாவட்டத்திற்குள் இடமாறுதல் கேட்டு 107 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் 10 பேருக்கு இடமாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது. மாவட்டத்திற்குள் இடமாறுதல் கேட்டு 116 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் 9 பேருக்கு இடமாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து பட்டதாரி ஆசிரியர்கள் பணி நிரவல் கலந்தாய்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மீண்டும் சர்வர் இணைப்பு கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டதால் இரவு 7 மணி வரை கலந்தாய்வு தொடங்கவில்லை.

பட்டதாரி ஆசிரியர் கழகம்

இந்தநிலையில் தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் மாநில செயலாளர் பிச்சைக்கனி தலைமையில் முதன்மை கல்வி அலுவலரிடம் ஒரு மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், பணிநிரவலில் தமிழ் மற்றும் சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தமிழகத்தில் புறக்கணிக்கப்படுதலை தவிர்க்கவேண்டும். அரசு பணிக்கான எழுத்து தேர்வில் இந்த பாடங்களில் இருந்து தான் 80 சதவீத கேள்விகள் கேட்கப்படுகின்றன. பணி நிரவலில் இந்த ஆசிரியர்கள் வெளிமாவட்டத்திற்கு சென்றால் மானூர், புளியரை, பழவூர், வேலசெங்கோட்டை. கடையநல்லூர் ஆகிய அரசு பள்ளிகளில் சமூக அறிவியல் ஆசிரியர் இல்லாத நிலை உருவாகிவிடும். மாணவர்கள் நலன் கருதி கட்டாயம் இதை தவிர்க்கவேண்டும் என்று கூறி உள்ளனர்.

மேலும் செய்திகள்