குன்னூர் அருகே வெடிமருந்து தொழிற்சாலையை பாதுகாக்கக்கோரி தொழிலாளர்கள் உண்ணாவிரதம்

குன்னூர் அருகே அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையை பாதுகாக்கக்கோரி தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வியாபாரிகள் கடைகளை அடைத்தனர்.

Update: 2018-06-19 23:30 GMT

குன்னூர்,

குன்னூர் அருகே உள்ள அருவங்காட்டில் வெடிமருந்து தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலை மத்திய பாதுகாப்பு துறைக்கு சொந்தமானது. இந்த தொழிற்சாலையில் ராணுவத்திற்கு தேவையான வெடிபொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

இந்த தொழிற்சாலையில் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களாக சி.எப்.எல்.யு., ஐ.என்.டி.யு.சி. போன்ற தொழிற்சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. வெடிமருந்து தொழிற்சாலையின் 2018–19–ம் ஆண்டிற்கான உற்பத்தி இலக்கு குறைத்து வழங்கப்பட்டு உள்ளது. இதன்காரணமாக தொழிற்சாலை மூடும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதனால் தொழிலாளர்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டு உள்ளது.

வெடிமருந்து தொழிற்சாலை மூடப்படாமல் இருக்கவும், தொழிற்சாலையின் உற்பத்தி இலக்கு அதிகரிக்கவும் தொழிற்சங்கங்கள் போராடி வருகின்றன. இந்த நிலையில் சி.எப்.எல்.யு. தொழிற்சங்கமும், ஐ.என்.டி.யு.சி. தொழிற்சங்கமும் ஒன்றிணைந்து கூட்டுக்குழுவை அமைத்து உள்ளனர். இந்த கூட்டுக்குழு சார்பில் தொழிற்சாலையின் தற்போதுள்ள நிலவரத்தை எடுத்துக்கூறும் வகையில் அனைத்து தொழிலாளர்களிடமும் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இதனைதொடர்ந்து தொழிலாளர்களின் சார்பில் மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நேற்று முன்தினம் மாலை நடத்தப்பட்டது. இந்த பேரணி தொழிற்சாலை வளாகத்தில் தொடங்கி அருவங்காடு மெயின் கேட் வழியாக தொழிலாளர் குடியிருப்பு வழியாக சென்றது.

இந்தநிலையில் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையை பாதுகாக்கக்கோரி தொழிற்சாலை நுழைவுவாயில் முன்பு ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் மற்றும் தர்ணா போராட்டம் நேற்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. சி.எப்.எல்.யு. தலைவர் அசோகன் தலைமை தாங்கினார். ஐ.என்.டி.யு.சி. தலைவர் ஜோஷிலாசர், பொதுசெயலாளர் திலீப்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உண்ணாவிரத போராட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து சி.எப்.எல்.யு. தலைவர் அசோகன் கூறியதாவது:– அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை 100 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டுக்காக சேவையாற்றி வருகிறது. பாரத நாட்டின் பாதுகாப்பிற்காக நடந்த பல போர்களில் அருவங்காடு தொழிற்சாலை அரும் பங்காற்றியுள்ளது. கடந்த 1999–ம் ஆண்டு நடந்த கார்கில் போரில் ராணுவத்திற்கு தேவையான பொருட்களை சரியான நேரத்தில் இரவு, பகல் என்று பாராமல் உழைத்து சேவையாற்றியதற்காக அருவங்காடு தொழிற்சாலையின் பங்களிப்பை அப்போதைய குடியரசு தலைவர் கே.ஆர்.நாராயணன் பாராளுமன்றத்தில் பாராட்டி கவுரவித்தார்.

கடந்த ஆண்டின் உற்பத்தி இலக்கை குறிப்பிட்ட காலக்கெடுவுக்கு முன்பே முடித்து கொடுத்திருந்த போதும் மத்திய அரசின் தொழிலாளர் விரோத கொள்கையினால் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலைக்கான இந்த ஆண்டிற்கான உற்பத்தி இலக்கு 46.8 சதவீதம் குறைத்து ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

இந்திய ராணுவத்திற்கு தற்போது தேவைப்பட்டுக்கொண்டிருக்கின்ற பி.எம்.சிஸ். போன்ற வெடிமருந்துகள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் விலையை விட குறைவான விலையில் நாங்கள் தயாரித்து வழங்கி வருகிறோம். அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் அனைத்து வசதிகளும், அனுபவமிக்க தொழிலாளர்களும் இருந்தும் மேல்மட்டத்தில் உள்ள அதிகாரிகளின் சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தால் உற்பத்தி இலக்கு குறைவாக வழங்கப்பட்டு உள்ளது. தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கூடுதல் பணிநேரம் கடந்த மே மாதம் 21–ந் தேதி முதல் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனால் தொழிலாளர்களுக்கு ஊதிய இழப்பு ஏற்பட்டு உள்ளது.

அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலைக்கு ஒதுக்கப்பட்டு உள்ள உற்பத்தி இலக்கும் செப்டம்பர் மாதம் 28–ந் தேதி வரை மட்டுமே இருக்கும். அதன்பிறகு தொழிற்சாலையின் உற்பத்தி முற்றிலுமாக நிறுத்தப்படும். இப்படிப்பட்ட அபாய நிலை ஏற்படும் பட்சத்தில் இத்தொழிற்சாலையில் பணிபுரியும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையை இழப்பதுடன், அவர்களின் குடும்பத்தினரும் இத்தொழிற்சாலையை நம்பியுள்ள வியாபாரிகளும், பொதுமக்களும் பாதிப்புக்குள்ளாவதுடன் நீலகிரி மாவட்டத்தின் பொருளாதாரமும் நலிவடையும்.

அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட கூட்டுக்குழு தீர்மானித்து உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். தொழிலாளர்களின் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அருவங்காடு பகுதியில் உள்ள அனைத்து வியாபாரிகளும் தங்களது கடைகளை அடைத்தனர். இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் அருவங்காடு பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

வெடிமருந்து தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டத்தையொட்டி அப்பகுதியில் அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்