இன்று மவுன ஊர்வலம் நடத்துவதாக தகவல்: 2 ஆயிரம் போலீசார் குவிப்பால் தூத்துக்குடியில் மீண்டும் பரபரப்பு
துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று மவுன ஊர்வலம் நடத்துவதாக தகவல் பரவியதால் தூத்துக்குடியில் 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டனர்.
தூத்துக்குடி,
துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று மவுன ஊர்வலம் நடத்துவதாக தகவல் பரவியதால் தூத்துக்குடியில் 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று மவுன ஊர்வலம்
தூத்துக்குடியில் கடந்த 22-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதனால் போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 13 பேர் உயிர் இழந்தனர். அவர்களின் உடல்கள் கடந்த 10 நாட்களுக்கு முன்பு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டது. தற்போது தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்பி உள்ளது.
இந்த நிலையில் துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்தவர்களுக்கு பொதுமக்கள், குடும்பத்தினர், வியாபாரிகள் சார்பில் இன்று (புதன்கிழமை) மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்படுவதாகவும், மவுன ஊர்வலம் செல்ல இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் தூத்துக்குடி நகரின் முக்கிய பகுதிகளில் நேற்று போலீசார் குவிக்கப்பட்டனர்.
2 ஆயிரம் போலீசார் குவிப்பு
தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. சண்முகராஜேசுவரன், டி.ஐ.ஜி.கள் பிரதீப்குமார், கபில்குமார் சரத்கார் ஆகியோர் தலைமையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் அருண்சக்திகுமார் (நெல்லை), முரளிரம்பா (தூத்துக்குடி) மற்றும் 10 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் தூத்துக்குடியில் முகாமிட்டு உள்ளனர். இதனை தவிர தூத்துக்குடி நகர் பகுதிகளில் 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இதனால் தூத்துக்குடியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.