மகனை கொலை செய்து விடுவதாக கூறி தொழில் அதிபரிடம் ரூ.25 லட்சம் கேட்டு மிரட்டல்

திருச்செங்கோட்டில் மகனை கொலை செய்து விடுவதாக கூறி தொழில் அதிபரிடம் ரூ.25 லட்சம் கேட்டு மிரட்டிய கூலிப்படையை சேர்ந்த 2 பேரை சினிமா பாணியில் போலீசார் விரட்டி பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த கும்பலை சேர்ந்த மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2018-06-18 23:45 GMT
திருச்செங்கோடு,

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகரில் சேலம் மெயின் ரோட்டில் உள்ள புனித அந்தோணியார் பள்ளி அருகே வசித்து வருபவர் செங்குட்டுவன் (வயது 51), தொழில் அதிபர். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்களில் மூத்த மகன் டாக்டர் ரதீஸ்.

செங்குட்டுவனின் 2-வது மகன் பிரசாத் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலை விபத்தில் இறந்து விட்டார். இந்த நிலையில் தனது மனைவி, மூத்த மகனுடன் செங்குட்டுவன் வசித்து வருகிறார். கடந்தசில நாட்களுக்கு முன்பு இவரது செல்போனில் மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது அந்த நபர், நாங்கள் கூலிப்படையை சேர்ந்தவர்கள், உங்கள் மூத்த மகனை கொலை செய்ய எங்களிடம் ஒருவர் கூறி உள்ளார். உங்கள் மகனை கொலை செய்யாமல் இருக்க ரூ.30 லட்சம் தர வேண்டும் என்று மிரட்டி உள்ளார். இதனால் பயந்து போன செங்குட்டுவன் மிகுந்த மனக்குழப்பத்தில் இருந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் மீண்டும் செல்போனில் அவரை தொடர்பு கொண்டு மீண்டும் மிரட்டினர். பின்னர் நேற்று காலையில் அவரை செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர், ரூ.25 லட்சம் தந்தால் உங்கள் மகனை ஒன்றும் செய்ய மாட்டோம் என்று பேசி உள்ளார்.

அதற்கு ரூ.25 லட்சம் தர சம்மதித்த செங்குட்டுவன், இது தொடர்பாக திருச்செங்கோடு நகர போலீசுக்கு தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் அந்த கூலிப்படையை பொறி வைத்து பிடிக்க திட்டமிட்டனர். இதையடுத்து அந்த கும்பலை சேர்ந்தவர்கள் மீண்டும் பேசினால், முதலில் முன்பணம் ரூ.3 லட்சம் தருகிறேன் என்று கூறுமாறு செங்குட்டுவனிடம் போலீசார் கூறினர்.

அதன்படி அந்த கும்பலை சேர்ந்தவர் மீண்டும் பேசும் போது, திருச்செங்கோடு கிரிவல பாதையில் மலார் குட்டை கரையில் உள்ள அம்மன் கோவில் வாசலில் அந்த பணத்தை போட்டு விட்டு செல்லுமாறு தெரிவித்தார். இதையடுத்து போலீசார், சினிமா படப்பிடிப்பில் பயன்படுத்தும் டம்மி பணத்தை ரூ.3 லட்சத்திற்கு தயார் செய்து செங்குட்டுவனிடம் கொடுத்தனர். (500 ரூபாய் நோட்டுகளை கட்டின் மேல் மற்றும் கீழே வைத்து விட்டு நடுவில் வெள்ளைத்தாள்கள் மட்டும் வைத்திருப்பது டம்மி பணக்கட்டு) மேலும் அந்த கூலிப்படையினர் கூறிய இடத்தில் இருந்து எந்தெந்த பாதையில் எல்லாம் தப்பிச்செல்லலாம் என்பதை அறிந்து போலீசார் ஆங்காங்கே சாதாரண உடையில் நிறுத்தப்பட்டனர்.

இதையடுத்து நேற்று மாலை செங்குட்டுவன் போலீசார் கொடுத்த டம்மி பணத்தை ஒரு பையில் வைத்து எடுத்துக்கொண்டு காரில் மலார்குட்டை பகுதிக்கு சென்றார். அப்போது போலீசார் அறிவுறுத்தலின் பேரில், முதலில் அந்த பையை குறிப்பிட்ட இடத்தில் போடாமல் சிறிது தூரம் சென்றார். உடனே அந்த கூலிப்படையை சேர்ந்த ஒருவர் செங்குட்டுவனை செல்போனில் தொடர்பு கொண்டு, பணத்தை நாங்கள் சொன்ன இடத்தில் போடாமல் ஏன் செல்கிறீர்கள் என்று கூறி உள்ளார்.

உடனே அந்த இடம் தெரியாமல் கடந்து வந்துவிட்டேன், உடனே அந்த இடத்திற்கு சென்று பணத்தை போட்டு விடுகிறேன், எனது மகனை ஒன்றும் செய்து விடாதீர்கள் என்று கூறிவிட்டு அவர் மீண்டும் காரில் அந்த கும்பல் குறிப்பிட்ட இடத்திற்கு வந்து பணப்பையை போட்டு விட்டு அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார். இதையடுத்து அங்கு சாதாரண உடையில் மறைந்திருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதிமோகன் தலைமையிலான போலீசார் தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் 4 பேர் அங்கு விரைந்து வந்தனர். அங்கு அவர்கள் பணப்பையை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் கிரிவல பாதையில் சிட்டாய் பறந்தனர். இதை கவனித்த போலீசார் அந்த 2 மோட்டார் சைக்கிள்களையும் விரட்டி சென்றனர். அப்போது அந்த கும்பலில் ஒரு மோட்டார் சைக்கிளை போலீசார் மடக்கி பிடித்தனர்.

மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். அதே நேரத்தில் பிடிபட்டவர்களிடம் இருந்த டம்மி பணத்தை கைப்பற்றிய போலீசார் அவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

பிடிபட்டவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள், குமார்(வயது 36), சுரேஷ்குமார்(23) என்பது தெரியவந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையை அடுத்து கூலிப்படையில் தப்பிச்சென்றவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் வேறு யாருக்கெல்லாம் இதில் தொடர்பு உள்ளது என்றும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் திருச்செங்கோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்