திருவேற்காட்டில் மணல் திருட்டால் ஏரியின் கரை உடையும் ஆபத்து

திருவேற்காடு சுந்தரசோழ புரத்தில் உள்ள ஏரியில் மணல் திருடப்படுவதால் ஏரிக்கரை உடையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

Update: 2018-06-18 22:02 GMT
பூந்தமல்லி,

திருவேற்காடு சுந்தரசோழபுரத்தில் ஏரி உள்ளது. இந்த ஏரியை ஒட்டிய பகுதியில் மர்மநபர்கள் சட்டவிரோதமாக மணலை அள்ளுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருவேற்காடு போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் அங்கு சென்று பார்த்தனர்.

அப்போது, இரவு நேரங்களில் மர்மநபர்கள் ஏரிக்கரையை ஒட்டி பொக்லைன் எந்திரம் மூலம் மணலை எடுத்து லாரிகளில் கொண்டு சென்றிருப்பது தெரியவந்தது. மணல் எடுத்தது தெரியாமல் இருக்க அந்த பகுதியில் கழிவு மண்ணை கொண்டு வந்து கொட்டி வைத்திருப்பதும் தெரியவந்தது. மேலும், மணல் அள்ளுவதற்கு லாரிகள் சென்று வருவதற்காக பாதை அமைக்கப்பட்டு உள்ளது.

கரை உடையும் ஆபத்து

இந்த ஏரிக்கரையின் மீது தினந்தோறும் மோட்டார்சைக்கிள்கள் மற்றும் கனரக வாகனங்கள் சென்று வருகிறது. மணல் திருட்டு காரணமாக ஏரிக்கரை உடையும் ஆபத்து ஏற்பட்டு உள்ளது. மேலும், ஏரியில் தண்ணீர் சேமிக்கவும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

திருவேற்காடு பகுதியில் அதிக அளவில் மணல் திருட்டு நடப்பதாகவும், அதனை வருவாய்த்துறையினர் கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. திருவேற்காடு சுந்தரசோழபுரம் ஏரியில் மணல் திருட்டு நடப்பதை அதிகாரிகள் தடுக்க வேண்டும் என்றும், அவற்றில் ஈடுபடும் மர்மநபர்களை கைது செய்ய வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மணல் திருட்டு குறித்து திருவேற்காடு போலீசில் புகார் அளிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பூந்தமல்லி தாசில்தார் தெரிவித்தார். 

மேலும் செய்திகள்