பூந்தமல்லியில் வக்கீல்கள் 4-வது நாளாக கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம்

பூந்தமல்லியில் வக்கீல்கள் நேற்று 4-வது நாளாக தொடர் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-06-18 20:18 GMT
பூந்தமல்லி, 

பூந்தமல்லி பஸ் நிலையம் அருகே ஒருங்கிணைந்த நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இதில் சார்பு நீதிமன்றம், கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் 2 மற்றும் 3, குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1 மற்றும் 2 உள்ளிட்ட நீதிமன்றங்கள் இயங்கி வருகிறது.

இந்த நிலையில் இங்குள்ள வழக்குகள் சிலவற்றை திருவள்ளூர் கோர்ட்டுக்கு மாற்றப்பட உள்ளதாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வக்கீல்கள் நேற்று 4-வது நாளாக தொடர் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கோர்ட்டு பணிகள் பாதிக்கப்பட்டன.

இது தொடர்பாக வக்கீல்கள் கூறும்போது, “பூந்தமல்லி நீதிமன்றத்தில் விபத்துகள், நிலம் ஆக்கிரமிப்பு, குடும்ப நல வழக்குகள் உள்ளிட்ட சில வழக்குகளை திருவள்ளூர் கோர்ட்டுக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதனால் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் திருவள்ளூருக்கு சென்று வர பணமும், நேரமும் அதிகம் செலவாகும். பூந்தமல்லி, ஆவடி, அம்பத்தூர் பகுதி மக்கள் திருவள்ளூர் கோர்ட்டுக்கு செல்ல மிகுந்த சிரமம் அடைவார்கள். பூந்தமல்லி பஸ் நிலையம் அருகேயே இந்த கோர்ட்டு இருப்பதால் வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் எளிதில் வந்து செல்ல முடியும். எனவே வழக்குகளை திருவள்ளூர் கோர்ட்டுக்கு மாற்றக்கூடாது என முதன்மை நீதிபதியிடம் மனு அளித்து உள்ளோம். அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுவோம்” என்றனர். 

மேலும் செய்திகள்