கொடைக்கானலில் ஆயுத பயிற்சி மேற்கொண்ட வழக்கு: கோர்ட்டில் மாவோயிஸ்டு காளிதாஸ் ஆஜர்

கொடைக்கானல் மலைப்பகுதியில் ஆயுத பயிற்சி மேற்கொண்ட வழக்கில், திண்டுக்கல் கோர்ட்டில் மாவோயிஸ்டு காளிதாசை போலீசார் ஆஜர்படுத்தினர். அவரை 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மாஜிஸ்திரேட்டு அனுமதி அளித்தார்.

Update: 2018-06-18 23:00 GMT

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ள வடகவுஞ்சி மலைப்பகுதியில், கடந்த 2008–ம் ஆண்டு மாவோயிஸ்டுகள் பதுங்கி இருந்து ஆயுத பயிற்சியில் ஈடுபட்டனர். இதுகுறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதிக்கு விரைந்து சென்ற சிறப்பு அதிரடிப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது மாவோயிஸ்டுகளுக்கும், போலீசாருக்கும் இடையே துப்பாக்கி சூடு நடந்தது.

இதில் மாவோயிஸ்டு நவீன்பிரசாத் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டார். 2 பெண் மாவோயிஸ்டுகள் உள்பட 7 பேர் தப்பியோடிவிட்டனர். அவர்கள் வனப்பகுதியில் தங்கி இருந்து, மாவோயிஸ்டு இயக்கம் குறித்து மலைக்கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். மேலும் துண்டுபிரசுரங்கள் வழங்கியும், பாட்டுப்பாடியும் பொதுமக்களை மூளைச்சலவை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து நீலமேகம் என்பவரை வேடசந்தூரில், கொடைக்கானல் போலீசார் கைது செய்தனர். இதேபோல மாவோயிஸ்டுகள் ரஞ்சித், கண்ணன், ரீனாஜாய்ஸ்மேரி ஆகியோர் வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டனர். பகத்சிங் என்பவர் போலீசில் சரணடைந்தார். பகத்சிங்கின் தங்கையான செண்பகவல்லி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருவள்ளூர் மாவட்டத்தில் போலீசாரிடம் சிக்கினார். இதையடுத்து அவரும் கொடைக்கானல் வழக்கில் கைது செய்யப்பட்டார்.

பிடிபட்ட அனைவரின் மீதும் ஆயுத பயிற்சி மேற்கொண்டது, மாவோயிஸ்டு இயக்கத்துக்கு ஆள் சேர்த்தது போன்ற குற்றங்களுக்காக கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக இருந்த காளிதாசை, கோவை அருகே தமிழக–கேரள எல்லையில் அகழி என்ற இடத்தில் வைத்து கேரள போலீசார் கைது செய்தனர். இவர் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்தவர் ஆவார். இவர் சேகர் என்ற பெயரிலும் வலம் வந்துள்ளார்.

இவர் மீது கேரளாவில் 6 வழக்குகள் உள்பட மொத்தம் 17 வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அவரை கொடைக்கானல் வழக்கில் கைது செய்ய காலதாமதம் ஏற்பட்டது. இந்தநிலையில் கொடைக்கானல் வழக்கில் அவரை கைது செய்வதற்காக, போலீஸ் துணை சூப்பிரண்டு பொன்னுசாமி தலைமையிலான போலீசார் கேரளாவுக்கு விரைந்தனர். இதையடுத்து கேரள மாநிலம் கண்ணூர் மத்திய சிறையில் இருந்த அவரை, நேற்று முன்தினம் அழைத்து வந்து மதுரை சிறையில் அடைத்தனர். பின்னர் நேற்று திண்டுக்கல் 2–வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அவரை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு போலீஸ் துணை சூப்பிரண்டு பொன்னுசாமி மனு தாக்கல் செய்தார். இதையடுத்து காளிதாசை 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மாஜிஸ்திரேட்டு பாலமுருகன் அனுமதி அளித்தார். மேலும் அவரை நாளை (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்