ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தி தரவேண்டும்

பண்ருட்டி ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தி தரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2018-06-17 21:56 GMT
படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த பண்ருட்டி ஊராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ சிகிச்சைக்காகவும், பரிசோதனைக்காவும் அருகில் உள்ள கண்டிகை, மாத்தூர், மேட்டுப்பாளையம், குண்ணவாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இங்கு தாய் சேய் நலம், பொது மருத்துவம், மலேரியா, தொழுநோய், பெண்களுக்கான மார்பக பரிசோதனை, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு உள்பட பல்வேறு சிகிச்சைகளுக்கு வரும் பொதுமக்களுக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

2 மருத்துவர்கள் இருக்க வேண்டிய ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு மருத்துவர் மட்டுமே உள்ளதால் பரிசோதனைக்கு வருபவர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

ஒரு சில நேரங்களில் அந்த மருத்துவரும் இல்லாததால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் வேதனையுடன் திரும்பிச்செல்கின்றனர். 4 செவிலியர்கள் இருக்க வேண்டிய சுகாதார நிலையத்தில் 2 செவிலியர்கள் மட்டுமே உள்ளனர். நோயாளிகள் காத்திருப்பதற்கான இட வசதியும் இல்லாததால் வெயிலில் அமர வேண்டிய நிலை உள்ளது. மேலும் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் காசநோய் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை பரிசோதித்து மருந்து வழங்க போதிய இட வசதி இல்லை, இரவு நேரங்களில் சுகாதார நிலையத்தின் நுழைவு வாயிலில் மின் விளக்குகள் சரியாக எரிவதில்லை.

நிரந்தரமாக காவலர் இல்லாமலும் சுகாதார நிலையத்தின் உள்புறம் சுற்றுச்சுவர் இல்லாமல் இருப்பதால் இரவு நேரங்களில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் பொதுமக்களும், நோயாளிகளும் மிகுந்த அச்சத்துடன் வர வேண்டிய நிலை உள்ளது. எனவே பண்ருட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நிரந்தரமாக 2 மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும் ஆய்வக உதவியாளர்களை பணியமர்த்தி கூடுதல் வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என்று அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்