ஆகாயத்தாமரைகள், கோரைப்புற்கள் வளர்ந்து உள்ளதால் கால்வாயை தூர்வார பொதுமக்கள் கோரிக்கை

ஆகாயத்தாமரைகள், கோரைப்புற்கள் அதிகம் வளர்ந்து உள்ளதால் கேப்டன் காட்டன் கால்வாயை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2018-06-17 22:00 GMT
பெரம்பூர்,

சென்னை மூலக்கடையில் இருந்து கொடுங்கையூர், சர்மாநகர், எம்.கே.பி.நகர், வியாசர்பாடி வழியாக செல்லும் கேப்டன் காட்டன் கால்வாய், பின்னர் ஆர்.ஆர்.நகரை கடந்து கடலில் சென்று கலக்கிறது. இந்த கால்வாயின் இருபுறமும் திருவள்ளுவர் நகர், கண்ணதாசன் நகர், முல்லை நகர் உள்ளிட்ட பல்வேறு நகர்கள் உள்ளன.

இந்த நகர்களில் 200-க்கும் மேற்பட்ட தெருக்களில், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறும் மழைநீர், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அனைத்தும் இந்த கேப்டன் காட்டன் கால்வாய் வழியாக கடலுக்கு செல்கின்றது.

தற்போது இந்த கால்வாயின் பெரும்பகுதியை ஆகாயத்தாமரை செடிகளும், கோரைப்புற்களும் ஆக்கிரமித்து விட்டன. கால்வாய் இருப்பதே தெரியாத அளவுக்கு பச்சை போர்வையை போர்த்தியது போன்று கால்வாய் முழுவதும் ஆகாயத்தாமரைகள் வளர்ந்து காணப்படுகிறது.

கால்வாய் ஓரங்களில் குப்பைகள் கொட்டப்பட்டும், செடி, கொடிகள் வளர்ந்தும் உள்ளன. இதனால் கால்வாயில் தண்ணீர் ஓட்டம் குறைந்து காணப்படுகிறது. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் மழைநீர் கால்வாய்க்குள் செல்ல வழி இல்லாமல் தேங்கி நிற்கிறது.

இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. அத்துடன் செடி, கொடிகள் வளர்ந்து கால்வாயில் தண்ணீர் தேங்கி நிற்பதால் அதிகளவில் கொசுக்களும், சிறு, சிறு பூச்சுகளும் பெருகி அருகில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றன. இதனால் கால்வாய் ஓரம் வசிக்கும் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர்.

மழைக்காலங்களில் தண்ணீர் செல்ல வழி இல்லாமல் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் மழைநீர் புகுந்து விடும் சூழலும் உள்ளது. ஆகவே இந்த கால்வாயை தூர்வாரும்படி பலமுறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், மழைக்காலத்துக்கு முன்பாகவே இந்த கேப்டன் காட்டன் கால்வாயில் வளர்ந்து உள்ள ஆகாயத்தாமரைகள், கோரைப்புற்கள், செடி, கொடிகள் மற்றும் குப்பைகளை அகற்றி மழைநீர், கழிவுநீர் தங்கு தடைஇன்றி கடலில் சென்று கலக்கும் அளவுக்கு கால்வாயை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்