திருட்டு வழக்கு குறித்து விசாரிக்க சென்ற போலீஸ்காரர்கள் மீது தாக்குதல்; ஒருவர் கைது

திருட்டு வழக்கு குறித்து விசாரிக்க சென்ற போலீஸ்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-06-17 22:00 GMT

நெடுங்கண்டம்,

பீர்மேடு அரசு கருவூலத்தில் கடந்த 9–ந்தேதி மர்ம நபர்கள் திருட முயன்றனர். இதுதொடர்பாக கருவூல அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் வண்டிப்பெரியார் போலீஸ் இன்ஸ்பெக்டர் பகித்லால் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் பூப்பாறை பகுதியை சேர்ந்த ஆனந்தன் என்பவருக்கு திருட்டு வழக்கில் தொடர்பிருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

விசாரணையில் நெடுங்கண்டம் மஞ்சப்பட்டியை சேர்ந்த ஜோஸ் (வயது 40) என்பவருடன் சேர்ந்து அரசு கருவூலத்தில் பகித்லால் திருட முயன்றது தெரியவந்தது. நேற்று முன்தினம் நெடுங்கண்டம் மஞ்சப்பட்டிக்கு சென்ற போலீசார் ஜோஸ் வீட்டுக்கு சென்று அவரை கைது செய்ய முயன்றனர்.

அப்போது ஜோஸ் அவருடைய தம்பிகளான ஜோமோன், ஜான்சன் ஆகியோருடன் சேர்ந்து போலீஸ்காரர்கள் மீது தாக்குதல் நடத்தினார். இதற்கிடையே தகவலறிந்து நெடுங்கண்டம் போலீசார் ஜோஸ் வீட்டுக்கு சென்றனர். ஆனால் அதற்குள் ஜோஸ், ஜோமோன் ஆகியோர் தப்பியோடி தலைமறைவாகினர். ஜான்சனை மட்டும் போலீசார் கைது செய்து தலைமறைவானவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளை பிடிக்கச்சென்ற போலீஸ்காரர்கள் மீது நடந்த தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்