தமிழ்நாட்டில் தொழில் வளம் பின்னோக்கி சென்று விட்டது - முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் தொழில் வளம் பின்னோக்கி சென்று விட்டதாக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

Update: 2018-06-17 23:30 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானா அருகில் கிழக்கு மாவட்ட தி.மு.க. இலக்கிய அணி மற்றும் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட துணை அமைப்பாளர் அஸ்லம் ரஹ்மான் ஷெரீப் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தன், கோவிந்தசாமி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அமீன் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். தி.மு.க. நகர செயலாளர் நவாப் வரவேற்று பேசினார்.

இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், தி.மு.க. உயர்நிலை செயல் திட்ட குழு உறுப்பினருமான எ.வ.வேலு எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். இதில் 950 பேருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கி அவர் பேசியதாவது:-

தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையிலான ஆட்சியின் போது, தமிழகத்தில் பெண்களுக்கு சொத்தில் சம பங்கு சட்டம் கொண்டு வந்தார். தமிழகத்திலேயே முதல் முறையாக தர்மபுரி மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களை உருவாக்கினார். இந்தியாவிலேயே மாநில முதல்-அமைச்சர்கள் கோட்டையில் கொடியேற்றும் உரிமையை பெற்று தந்தார். ஆனால் தற்போது தமிழகத்தில் இரட்டை ஆட்சி முறை தான் நடந்து வருகிறது. பெட்ரோல் விலை பல மடங்கு உயர்ந்துவிட்டது. இதை பற்றி ஆட்சியாளர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை. ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில்லை.

தமிழ்நாட்டில் தொழில் வளம் பின்னோக்கி சென்றுவிட்டது. தமிழகத்தில் 50 ஆயிரம் சிறு, குறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டதாக தொழில்துறை அமைச்சர் சட்டமன்றத்தில் கூறுகிறார். அதற்காக இந்த அரசு எடுத்த நடவடிக்கை என்ன?. எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் கேட்கும் கேள்விகளுக்கு ஆட்சியாளர்கள் பதில் சொல்வதில்லை. தமிழகம் தலைநிமிர தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பதவியேற்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் கிழக்கு மாவட்ட செங்குட்டுவன் எம்.எல்.ஏ., முன்னாள் மாவட்ட செயலாளர் சுகவனம், மாநில மகளிர் அணி தலைவி காஞ்சனா கமலநாதன், சொத்து பாதுகாப்புக்குழு உறுப்பினர் வெற்றிச்செல்வன், மாநில விவசாய அணி துணை செயலாளர் வெங்கடேசன், மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், துணை செயலாளர்கள் நாகராஜ், சாவித்திரி கடலரசுமூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் பொன்.குணசேகரன், பர்கூர் ஒன்றிய செயலாளர் கோவிந்தராசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் நாராயணமூர்த்தி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்