ஸ்கூட்டர் மீது கார் மோதியதில் பெண் காயம் போலீஸ்காரர் வேறொரு காரில் தப்பிச்சென்றார்

ஸ்கூட்டர் மீது கார் மோதியதில் பெண் காயமடைந்தார். மோதிய காரை ஓட்டிய போலீஸ்காரர் வேறொரு காரில் தப்பிச்சென்றார்.

Update: 2018-06-16 22:33 GMT
அடையாறு,

சென்னை கலங்கரை விளக்கம் பகுதியை சேர்ந்தவர் முருகன் என்கிற ஜப்பார். இவரது மனைவி யாக்லின் பாத்திமா (வயது 27), கர்ப்பிணியாக உள்ளார். கணவன், மனைவி இருவரும் நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு ஸ்கூட்டரில் அடையாறு நோக்கி சென்றபோது, திரு.வி.க.நகர் பாலம் அருகே பின்னால் வந்த கார் ஸ்கூட்டர் மீது இடித்ததில் பாத்திமா கீழே விழுந்தார். இதில் அவரது காலில் காயம் ஏற்பட்டது.

இடித்துவிட்டு நிற்காமல் சென்ற காரை ஜப்பார் விரட்டிச்சென்றார். இதைப்பார்த்த அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த காரை மடக்கினர்.

அவர்கள் காரில் வந்த நபரை பிடித்து விசாரித்ததில், அவர் திருவான்மியூர் காவல் நிலைய ரோந்து ஜீப் டிரைவர் சந்திரகாந்த் (35) என தெரியவந்தது. அவரை அடையாறு போக்குவரத்து போலீசாரிடம் ஒப்படைப்பதற்காக அந்த இடத்திலேயே காத்திருக்க வைத்தனர். அப்போது சந்திரகாந்த் செல்போனில் பேசியதும், சிறிது நேரத்தில் அங்கு ஒரு கார் வந்து நின்றது.

அந்த காரில் திடீரென சந்திரகாந்த் ஏறி தப்ப முயன்றார். உடனே சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் ஸ்டாலின் சினிமாவில் வருவதுபோல அந்த காரின் ஜன்னலை தாவிப்பிடித்து தொங்கியபடி சென்றார். காரில் இருந்த நபர் அவரை எட்டிஉதைத்ததில் கீழே விழுந்து காயம் அடைந்தார். அந்த கார் நிற்காமல் தப்பிச்சென்றது. காயமடைந்த பாத்திமா மற்றும் போலீஸ்காரர் ஸ்டாலின் ஆகியோர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் பற்றி அடையாறு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்