மானாமதுரை பகுதியில் அதிகாரிகள் உடந்தையுடன் தொடரும் மணல் திருட்டு

மானாமதுரை பகுதியில் போலீஸ் மற்றும் வருவாய் அதிகாரிகள் உடந்தையுடன் தொடரும் மணல் திருட்டால் இயற்கை வளம் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Update: 2018-06-16 22:00 GMT

மானாமதுரை,

மானாமதுரை பகுதி வைகை ஆற்றுப்படுகையில் கிடைக்கும் மணல் தரமானதாக இருப்பதால் கட்டுமான பணிகளுக்கு அதிக அளவில் மணல் கொண்டு செல்லப்படுகிறது. மானாமதுரை வட்டாரத்தில் அரசு மணல் குவாரி இல்லாததால் பலரும் சட்டவிரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர். வைகை ஆற்றை ஒட்டிய பகுதிகளில் வசிக்கும் பலரும் அதிகாரிகளை சரிகட்டி மணல் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு 9 மணியில் இருந்து காலை 5 மணி வரை மணல் திருட்டு தாராளமாக நடந்து வருகிறது. மணல் திருடர்களுக்காக மானாமதுரையில் விடிய, விடிய டீக்கடைகள், ஓட்டல்களும் நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இரவு ஒன்பது மணிக்கு பொக்லைன் எந்திரத்துடன் வைகை ஆற்றில் இறங்கும் கும்பல் விடிய, விடிய மணலை அள்ளி மானாமதுரையை சுற்றி உள்ள கிராமப்புறங்களில் குவித்து வைத்து, பகலில் செங்கல் சேம்பர் லாரிகள் மூலம் சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு கடத்துகின்றனர்.

மானாமதுரை அருகே வேதியரேந்தல், கீழமேல்குடி, தெ.புதுகோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் திருட்டு நடந்து வருகிறது. மணல் திருட்டு குறித்து பொதுப்பணித்துறை, வருவாய்துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை. மேலும் அதிகாரிகளுக்கு மணல் திருடும் கும்பல் மாதந்தோறும் உரிய தொகை கொடுத்து சரிகட்டிவிடுவதால் மணல் திருட்டு வெகு ஜோராக நடப்பதாக பொதுமக்கள், விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் வைகை ஆற்றில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருவதுடன், இயற்கை வளம் பாதிக்கப்பட்டு விவசாயம் கேள்விக்குறியாகி வருகிறது. எனவே மணல் திருட்டை தடுக்க சிறப்புக்குழுக்கள் மூலம் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மணல் திருட்டில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்புச்சட்டத்தின்கீழ் நடவடிககை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதற்கிடையில் நேற்று முன்தினம் மானாமதுரை அருகே தெ.புதுக்கோட்டை பகுதி வைகை ஆற்றில் ஜே.சி.பி. எந்திரத்துடன் ஒரு கும்பல் மணல் அள்ளிக்கொண்டிருந்தது. அப்போது அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஜே.சி.பி. எந்திரத்தை சிறைப்பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனையடுத்து போலீசார் ஜே.சி.பி. எந்திரத்தை பறிமுதல் செய்து மணல் திருட்டில் ஈடுபட்டோர் குறித்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்