அரசு இசை பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்

திருவாரூர் மாவட்ட அரசு இசை பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் நிர்மல்ராஜ் கூறினார்.

Update: 2018-06-16 23:15 GMT
திருவாரூர்,

திருவாரூர் மாவட்ட அரசு இசை பள்ளியில் சேருவது குறித்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் அரசு இசை பள்ளி வாசன் நகரில் இயங்கி வருகிறது. தமிழக அரசின் கலை பண்பாட்டு துறையின்கீழ் இயங்கி வரும் இந்த இசை பள்ளியில் குரலிசை, நாதஸ்வரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய கலைகள் 3 ஆண்டு முழு நேர பயிற்சியாக அளிக்கப்பட்டு, தமிழக அரசின் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு அரசு விதிகளின்படி இலவச விடுதி வசதி, கல்வி உதவித்தொகை, இலவச பஸ் பயண கட்டண சலுகைகள் வழங்கப்படுகின்றன. மேலும் மாதந்தோறும் கல்வி ஊக்கத்தொகையாக ரூ.700 வழங்கப்படும்.

இப்பள்ளியில் சேருவதற்கு 12 முதல் 25 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும். குரலிசை, பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய கலைகளுக்கு 7-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. நாதஸ்வரம், தவில், தேவாரம் ஆகிய கலைகளுக்கு தமிழ் எழுத படிக்க தெரிந்தால் போதுமானது. ஆண்டு ஒன்றுக்கு கல்வி கட்டணம் ரூ.152 செலுத்த வேண்டும். இந்த பள்ளியில் சேர மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம். இதற்கான சேர்க்கை கடந்த 1-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. ஆண் மற்றும் பெண் என இருபாலரும் இப்பயிற்சியில் சேரலாம்.

தகுதியுடைய நபர்கள் மேலும் விவரங்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மாவட்ட அரசு இசைப்பள்ளி, திருவாரூர் என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்