ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரின் மனுவை ஜனாதிபதி மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் - டி.டி.வி.தினகரன்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரின் மனுவை ஜனாதிபதி மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் என்று கோவையில் டி.டி.வி.தினகரன் கூறினார்.

Update: 2018-06-16 23:15 GMT
கோவை,

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ., நேற்று காலை விமானம் மூலம் கோவை வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் நடப்பது மக்கள் விரோத ஆட்சி. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தூத்துக்குடிக்கு நேரில் சென்று மக்களிடம் அவர்களின் பிரச்சினை குறித்து பேச வேண்டும். 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் மக்கள் எதிர்பார்த்த தீர்ப்பு கிடைத்திருந்தால் 2 நாளில் இந்த ஆட்சி முடிவுக்கு வந்திருக்கும். தற்போது தமிழக அரசின் ஆயுட்காலம் கொஞ்ச நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அடுத்து பொதுதேர்தல் நடைபெற்றால் மாபெரும் வெற்றி பெறுவோம்.

சோனியா, ராகுல், பிரியங்கா போன்றவர்களே எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் உட்பட 7 பேரின் மனுவை பரிசீலனை செய்து ஜனாதிபதி விடுதலை செய்திருக்கலாம். மீண்டும் 7 பேரின் மனுவை ஜனாதிபதி ஒரு முறை பரிசீலனை செய்ய வேண்டும்.

18 எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்கில், 3-வது நீதிபதி யிடம் வழக்கை வாபஸ் வாங்க மனு தாக்கல் செய்தால், தொகுதியில் இடைத்தேர்தல் வரும். அப்போது நம் பலத்தை நிரூபிப்போம் என்று தங்க தமிழ்செல்வன் என்னிடம் கூறினார். அதற்கு சரி என்று அவருக்கு ஒப்புதல் கூறியுள்ளேன். மற்ற எம்.எல்.ஏக்கள் நீதிமன்றம் மூலமே சட்டநடவடிக்கை தொடரலாம் என தெரிவித்து உள்ளனர். 3-வது நீதிபதி நியமிக்கப்பட்ட பின்னர் அவரிடம் தங்க தமிழ்செல்வன் மனு தாக்கல் செய்வார்.

சேலம்- சென்னை 8 வழிச்சாலையில் முதல்-அமைச்சர் தனது உறவினர்களுக்கு காண்டிராக்ட் வேலைகளை கொடுக்கிறார். பின்னர் பிரச்சினை வந்தால் முதல்- அமைச்சர் அதை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். 8 வழிச்சாலை விவகாரத்தில் சேலம் மக்களே எதிர்ப்பாகத்தான் உள்ளனர். இந்த ஆட்சியின் நாட்கள் எண்ணப்பட்டு கொண்டிருக்கின்றன. முதல்-அமைச்சருக்கு எதிராக சேலம் மக்கள் இருக்கின்றனர். காவல்துறையை வைத்துக் கொண்டு போராடுபவர்களை இந்த ஆட்சியாளர்கள் கைது செய்கிறார்கள்.

தூத்துக்குடியில் இன்னும் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அ.ம.மு.க. ஆட்சிக்கு வந்தால் மக்கள் விரும்பாத எந்த திட்டமும் நிறைவேற்றப்படாது. ஆனால், அம்மா வழியில் ஆட்சி நடத்துகிறோம் என்று கூறிக் கொண்டு கோமாளித்தனமாக பேசுகின்றனர்.

அமைச்சர் ஜெயக்குமாரிடம் என்னை சேர்த்துக் கொள்ளும்படி யார் கேட்டார்கள் என தெரியவில்லை. யாருக்கோ பயந்துகொண்டு அவர்கள் செயல்படுகின்றனர். தமிழகம் முழுவதும் தேர்தல் வந்தால் நிச்சயம் வெற்றி பெறுவோம். மக்கள், ஆட்சியாளர்களை புறந்தள்ளிவிட்டனர். கூட்டம் போட காரணம் தேடி கூட்டம் போடுகிறார்கள். ஆனால் அதை பார்த்து மக்கள் எள்ளி நகையாடுகிறார்கள். காவல் துறை உதவியுடன் அ.தி.மு.க.வினர் கூட்டம் நடத்துகின்றனர். காவல் துறை இல்லாமல் அ.தி.மு.க. கூட்டம் எங்கும் நடத்த முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்