அமெரிக்க ராணுவத்தில் இணையும் ரோபோக்கள்!
அமெரிக்க ராணுவத்தில் விரைவில் எல்லாத் துறைகளிலும் ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அந்நாட்டு ராணுவத்துறை தெரிவித்துள்ளது.
அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன், நீண்டகாலமாக ரோபோக்கள் குறித்த ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறது. ‘ஆர்ட்டிபீஷியல் இன்டெலிஜென்ஸ்’ எனப்படும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படும் ரோபோக்களை பென்டகன் வடிவமைத்துவருகிறது.
அதனைத் தொடர்ந்து, அமெரிக்க ராணுவத்தில் ரோபோக்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் முதல்கட்டமாக, அணு ஆயுதத் தாக்குதலை முன்கூட்டியே கணிக்கும் ரோபோக்களை உருவாக்கவும் அமெரிக்க ராணுவம் முடிவு செய்திருக்கிறது.
ராணுவத்தில் குறைந்த அளவு மனிதர்களையும், அதிகளவு ரோபோக்களையும் பயன்படுத்துவதன் மூலம் உயிரிழப்பைக் குறைக்க முடியும் என்றும், ரோபோக்களின் மூலம் நடத்தப்படும் தாக்குதல்கள் துல்லியமாக இருக்கும் என்றும் அமெரிக்க பாதுகாப்புத் துறை கருதுகிறது.
அதேபோல, அமெரிக்காவில் பெரும்பாலான ராணுவ வீரர்கள், பாதுகாப்புப் படையினர் குண்டுகளை அகற்றும்போதுதான் மரணம் அடைகின்றனர். எனவே அதைத் தடுக்கும்வகையில், ரோபோக்களுக்குப் பயிற்சி அளிக்கவும் அந்நாட்டு ராணுவம் முடிவு செய்துள்ளது.
அதாவது, குண்டுவெடிப்பைத் தடுக்கக்கூடிய, எத்தகைய குண்டுகளையும் எளிதில் செயலிழக்கச் செய்யக்கூடிய ரோபோக்களை அமெரிக்க ராணுவம் சோதனை செய்து வருகிறது.
இந்நிலையில், அமெரிக்க ராணுவத்தில் உள்ள ஐந்து படைகளுடன் 6-வது படையாக ரோபோக்களை சேர்க்க உள்ளதாகவும், சில மாதங்களில் அதற்கான சோதனை நடத்த இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
ஆனால் அது எவ்வாறு நடைமுறைபடுத்தப்படும் என்பது குறித்து விளக்கமாகக் கூறப்படவில்லை.
ஆக, எதிர்காலத்தில் போர்களில் மனிதர்களுக்கு எதிராக ரோபோக்கள் துப்பாக்கி ஏந்தும்?