தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பல்வேறு திட்ட பணிகளுக்கு தமிழக அரசு ரூ.16 கோடி ஒதுக்கீடு - துணைவேந்தர் பாஸ்கரன்

தஞ்சை தமிழ்ப்பல் கலைக்கழகத்தில் பல்வேறு திட்ட பணிகளுக்கு தமிழக அரசு ரூ.16 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என துணைவேந்தர் பாஸ்கரன் கூறியுள்ளார்.

Update: 2018-06-15 23:30 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழக துணைவேந்தர் பாஸ்கரன் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

உலக தமிழர்களின் ஒப்பற்ற அடையாளமாக தமிழ்ப்பல் கலைக்கழகத்தை உயர்த்திட தமிழக அரசு நிதிநிலை அறிக்கையிலும், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை மானிய கோரிக்கையிலும் பல்வேறு திட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் வாழும் தமிழ் எழுத்து படிக்க தெரியாதவர்களும், தமிழ் உச்சரிப்பை அறியாதவர்களும் தமிழ்மொழி மற்றும் தமிழ்ப்பண்பாட்டின் சிறப்பை அறியும் வகையிலும், அதை கற்றுணர்ந்து பரப்பிடும் வகையிலும் தமிழ் வளர்மையம் தோற்றுவிக்கப்பட உள்ளது. உலக மொழிகளில் முதல் 10 இடத்திற்குள் ஒன்றாக தாய்மொழியை கொண்டு செல்ல வேண்டும் என்ற தமிழக அரசின் நோக்கத்திற்கு உறுதுணையாக தமிழ் வளர்மையமும், தமிழ்ப்பண்பாட்டு மையமும் அமையும்.

கரிகாற்சோழன் கலையரங்க மேம்பாட்டிற்கு ரூ.4 கோடியும், கட்டிடங்கள் சீரமைப்பு பணிக்கு ரூ.3 கோடியே 50 லட்சத்து 80 ஆயிரமும், பசுமை வளாகத்தை காக்கும் பொருட்டு சுற்றுச்சுவர் கட்ட ரூ.1 கோடியே 65 லட்சமும், சிற்பக்கலை பயிற்சி கூடம் தொடங்க ரூ.50 லட்சமும், நூலகத்தை மின்னணு நூலகமாக மாற்றி அமைக்க ரூ.50 லட்சமும், நூலக கட்டிடத்தில் உள்ள பனுவல் அரங்க மேம்பாட்டிற்கு ரூ.40 லட்சத்தையும் தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

மேலும் நூல்களை மறுபதிப்பு செய்ய ரூ.2 கோடியும், யோகா பயிற்சி மையத்தை விரிவுபடுத்த ரூ.10 லட்சமும், மியான்மர், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள தமிழர்கள் தமிழ்மொழியில் பேச, கற்பிக்க சிறப்பு பயிற்சி திட்டத்திற்கு ரூ.22 லட்சமும், அரிய நூல்களை மின்னாக்கம் செய்யும் பணிக்கு ரூ.10 லட்சமும், தமிழ் வளர் மையத்திற்கு ரூ.2 கோடியும், தமிழ்ப் பண்பாட்டு மையத்திற்கு ரூ.1 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ரூ.15 கோடியே 97 லட்சத்து 80 ஆயிரத்தையும், ஒவ்வொரு ஆண்டும் ரூ.3 கோடியே 25 லட்சத்தையும் தமிழ்ப்பல்கலைக்கழகத்திற்கு ஒதுக்கீடு செய்த முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், உறுதுணையாக இருந்த அமைச்சர் பாண்டியராஜன், அரசு செயலாளர் வெங்கடேசன் மற்றும் உயர் அதிகாரிகளுக்கும் தமிழ்ப்பல்கலைக்கழக ஆட்சிக்குழுவினர், பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்