பாகூர் அருகே இறந்தவரின் உடலை மாற்றி கொடுத்ததால் உறவினர்கள் அதிர்ச்சி திடீர் மறியல்
பாகூர் அருகே இறந்தவரின் உடலை மாற்றிக் கொடுத்ததால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து திடீர் மறியல், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.
பாகூர்,
கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தை அடுத்த இருப்புகுறிச்சி பகுதியை சேர்ந்தவர் புஷ்பராஜ் (வயது 64). சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த மாதம் புதுவை கிருமாம்பாக்கம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்தார்.
இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை புஷ்பராஜ் உயிரிழந்தார். இதுபற்றி அவருடைய உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர்கள் மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். இதனையடுத்து புஷ்பராஜ் உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.
உடலை ஆம்புலன்சில் ஏற்றுவதற்கு முன்பு உறவினர்களிடம் மருத்துவமனை ஊழியர்கள் காண்பித்தனர். அப்போது புஷ்பராஜின் மருமகள் சுபி அதிர்ச்சி அடைந்தார். அவருக்கு காண்பிக்கப்பட்டது புஷ்பராஜின் உடல் அல்ல. வேறு ஒருவரின் உடல் என்பது தான் இதற்கு காரணம். இதனால் மருத்துவமனை ஊழியர்கள் செய்வதறியாமல் திகைத்தனர்.
இதன்பின் பிணவறைக்கு சென்று புஷ்பராஜின் உடல் இருக்கிறதா? என்று தேடிப்பார்த்தனர். ஆனால் அங்கு புஷ்பராஜின் உடல் இல்லை. இதுபற்றி மருத்துவமனை நிர்வாகத்திற்கு ஊழியர்கள் தகவல் கொடுத்தனர். இதுகுறித்து விசாரித்ததில், கடலூர் முதுநகர் பகுதியில் தற்கொலை கொண்ட பூபாலன் உடலுக்கு பதிலாக, புஷ்பராஜின் உடலை கடலூர் போலீசாரிடம் மாற்றி ஒப்படைத்தது தெரியவந்தது. போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பியதும் தெரியவந்தது.
இந்தநிலையில் புஷ்பராஜ் உடலை மாற்றி கொடுத்ததை கண்டித்து அவருடைய உறவினர்கள் புதுவை–கடலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்து கிருமாம்பாக்கம் போலீசார் அங்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதை ஏற்று அவர்கள் சாலை மறியலை கைவிட்டனர்.
இதைத்தொடர்ந்து மருத்துவமனையை முற்றுகையிட்டு புஷ்பராஜ் உறவினர்கள் போராட்டம் நடத்தினார்கள். அவர்களிடம் மருத்துவமனை நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியது.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் கடலூர் போலீசாரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி உடல் மாற்றி அனுப்பி வைக்கப்பட்டது குறித்து தெரிவிக்கப்பட்டது. இதன்பின் புஷ்பராஜின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் கிருமாம்பாக்கம் மருத்துவமனைக்கு திரும்ப கொண்டு வரப்பட்டது. அந்த உடல் புஷ்பராஜின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இறந்து போனவர்களின் உடலை மாற்றிக் கொடுத்ததால் உறவினர்கள் திடீர் மறியல், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் கிருமாம்பாக்கம் மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தியது.