தனி அதிகாரம் பெற்ற மாநில அந்தஸ்து கேட்டு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவோம், நாராயணசாமி பேட்டி

புதுச்சேரிக்கு தனி அதிகாரத்துடன் கூடிய மாநில அந்தஸ்து வழங்க கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவோம் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Update: 2018-06-15 23:15 GMT

புதுச்சேரி,

புதுவை முதல்–அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

டெல்லி அரசு எடுத்த முடிவுகளை அங்குள்ள துணைநிலை ஆளுநர் (கவர்னர்) நிறுத்தி வைத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கும், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் இடையே உள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக கவர்னரை பகடை காயாக்கி டெல்லி அரசை முடக்கும் வேலையை மத்திய அரசு செய்கிறது என்று அரவிந்த் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டி உள்ளார்.

அவர்களுக்கு இடையேயான பனிப்போர் தொடர்ந்து இப்போது உச்சகட்டத்தை அடைந்துள்ளது. கடந்த 5 நாட்களாக டெல்லிக்கு மாநில அந்தஸ்து கேட்டும், மக்கள் நலத்திட்டங்கள் முடக்கப்பட்டதை கண்டித்தும் டெல்லி முதல் மந்திரி கவர்னர் மாளிகையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசு மாநிலங்களில் மாற்றுக்கட்சி ஆட்சியில் இருந்தால் அந்த அரசை முடக்கும் வேலையை செய்கிறது. புதுவையும் இதற்கு விதிவிலக்க அல்ல. அமைச்சரவை எடுக்கும் முடிவுகளை நிறைவேற்ற காலதாமதம் செய்வது, கோப்புகளை டெல்லிக்கு அனுப்புவது, ஜனநாயக விதிமுறைகளை மீறி செயல்படுவது ஆகியவற்றை கவர்னர் கிரண்பெடி செய்து வருகிறார்.

வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட அங்கீகரிக்கப்படாதவற்றின் மூலம் உத்தரவுகளை பிறப்பித்து அதிகாரிகளை கவர்னர் மிரட்டி வருகிறார். இதுதொடர்பாக புகார் தெரிவித்து கடிதம் எழுதியபோதிலும் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. இதை சமாளித்துத்தான் நிர்வாகத்தை நடத்தி வருகிறோம். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இதனால்தான் சிறப்பு மாநில அந்தஸ்து கேட்கிறோம்.

புதுவைக்கு என தனிக்கணக்கு ஆரம்பிக்கும் முன்பு மத்திய அரசு 70 சதவீத நிதியை மானியமாக தந்தது. தனிக்கணக்கு தொடங்கிய பின் அந்த மானியம் 30 சதவீதமாக குறைக்கப்பட்டது. ஆனால் இப்போது அதுவும் 27 சதவீதமாக குறைக்கப்பட்டுவிட்டது. மத்திய அரசு தனது தேவைக்கேற்ப புதுவை மாநிலத்தை பயன்படுத்திக்கொள்கிறது. வரி வருவாய் வேண்டும் என்றால் மாநிலம் என்று அங்கீகரிக்கிறார்கள். நிதி தரவேண்டும் என்றால் யூனியன் பிரதேசம் என்கிறார்கள். இந்த வி‌ஷயத்தில் மத்திய அரசு இரட்டை வேடம் போடுகிறது.

புதுவை மாநிலத்தை பொறுத்தவரை நாங்கள் மத்திய அரசிடம் புதுவையை மாநிலமாக அங்கீகரித்து சிறப்பு மாநில அந்தஸ்து கேட்டு உள்ளோம். இதுதொடர்பாக அமைச்சரவை கூட்டத்திலும் விவாதித்துள்ளோம். இந்தியாவில் உள்ள பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் புதுவைக்கு தனி அதிகாரம் பெற்ற மாநில அந்தஸ்து வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

புதுவை கவர்னர் கிரண்பெடி தொடர்ந்து விதிமுறையை மீறி செயல்படுகிறார். எனவே சிறப்பு அதிகாரம் பெற்ற மாநில அந்தஸ்து என்ற குரலை ஓங்கி ஒலிக்கிறோம். நாள்தோறும் தன்னைப்பற்றி விளம்பரம் செய்வதை தவிர வேறு எதையும் அவர் செய்யவில்லை. சமூக வலைதளத்தில் அவரது பெயர் படம் வந்தால்தான் அவர் நிம்மதியாக தூங்குவார்.

இவரைப்போன்று இந்தியாவில் வேறு யாரையும் பார்த்திருக்க முடியாது. அவர் இல்லாத அதிகாரத்தை இருப்பதாக நினைத்துக்கொண்டு அராஜகமாக செயல்படுகிறார். டெல்லி முதல் மந்திரி ஷீலா தீட்சித், அஜய் மக்கான் போன்றவர்கள் புதுவை, டெல்லிக்கு தனி அதிகாரம் பெற்ற மாநில அந்தஸ்து கேட்டு உள்ளனர். அதை சட்டமன்ற கூட்டத்தில் தீர்மானமாக கொண்டுவருவோம்.

இவ்வாறு முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

மேலும் செய்திகள்