மீன்பிடி தடைக்காலம் முடிந்தது: நாகை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்

மீன்பிடி தடைக்காலம் முடிந்ததையொட்டி நாகை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

Update: 2018-06-15 23:15 GMT
நாகப்பட்டினம்,

கடந்த 1983-ம் ஆண்டு தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் கீழ், கடல் பகுதிகளில் மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், கடலில் மீன்வளத்தைப் பாதுகாக்கும் வகையிலும், தமிழ்நாட்டின் கிழக்கு கடல் பகுதிகளில் ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் மே 30-ந்தேதி வரை 45 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தற்போது தமிழக அரசு மீன்பிடி தடைக்காலத்தை 61 நாட்களாக நீட்டித்துள்ளது. அதன்படி இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் கடந்த ஏப்ரல் மாதம் 15-ந்தேதி தொடங்கி நேற்று முன்தினம் நள்ளிரவுடன் முடிவடைந்தது. இந்த மீன்பிடி தடைக்காலத்தில் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடி தொழில் செய்யும் விசைப்படகுகள், இழுவலை படகுகள் ஆகியவை மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. ஆனால் கரை பகுதிக்கு சென்று மீன்பிடி தொழில் செய்யும் சிறியவகை படகுகள் மட்டுமே கடலுக்கு சென்று மீன்பிடித்து வந்தன.

மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்கள் தங்களது படகுகளை கடற்கரை ஓரங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்து, மராமத்து பணிகளை மேற்கொண்டனர். மீன்பிடி தடைக்காலத்தையொட்டி மீன்பிடி தொழிலுக்கு முக்கிய தேவையான ஐஸ் கட்டிகள் தயாரிக்கும் பணியும் பாதிக்கப்பட்டது. இதனால் ஐஸ் பிளாண்டுகளிலும் மராமத்து பணிகளை மேற்கொண்டு வந்தனர். இந்த மீன்பிடி தடைக்காலத்தில் பெரிய வகை படகுகள் மீன்பிடிக்க செல்லாததால் மீன் பிரியர்கள் வருத்தமடைந்தனர். இருப்பினும் சிறியவகை படகுகள் மூலம் மீன்பிடி தொழில் நடந்ததால் ஓரளவு மீன் தேவை பூர்த்தி செய்யப்பட்டது. இருப்பினும் மீன்களின் விலை மிக அதிகமாக காணப்பட்டது.

இந்தநிலையில் மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்ததையொட்டி நேற்று நள்ளிரவு முதல் நாகை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். ஆழ்கடலுக்கு செல்லும் மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டு கரை திரும்ப குறைந்தது 7 நாட்கள் ஆகும். எனவே ஒருவாரம் கடலில் தங்கி மீன்பிடிக்க தேவையான உணவு பொருட்கள் மற்றும் மீன்களை பதப்படுத்த ஐஸ் கட்டிகள், டீசல், மீன்பிடி வலைகள் உள்ளிட்ட மீன்பிடி சாதனங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் படகுகளில் ஏற்றி தயார் நிலையில் இருந்தனர். தடைக்காலம் முடிந்து முதன்முதலாக படகை கடலுக்கு செலுத்துவதால் மீனவர்கள் படகுகளுக்கு மாலை அணிவித்து, கற்பூரம் ஏற்றி சாமி தரிசனம் செய்துவிட்டு புறப்பட்டனர்.

மேலும் செய்திகள்