தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை மத்திய அரசு தான் முடிவு செய்யும், சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை மத்திய அரசு தான் முடிவு செய்யும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

Update: 2018-06-15 23:30 GMT

மதுரை,

மதுரை மருத்துவ கல்லூரி மைதானத்தின் ஒரு பகுதியில் ரூ.150 கோடி மதிப்பீட்டில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. மருத்துவமனையின் கட்டுமான பணிகள் குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு நடத்தினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை திறப்பது தாமதம் ஆகி வருகிறது. தற்போது மேல் தளங்களில் 90 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. ஜூலை மாத இறுதியில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் வெளிநோயாளிகள் பிரிவை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தினசரி 10 லட்சம் வெளிநோயாளிகள், 60 ஆயிரம் உள்நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். அரசு மருத்துவமனைகளில் தினசரி 65 ஆயிரம் அறுவை சிகிச்சைகள் நடைபெறுகின்றன.

தமிழகத்தில் மட்டுமே அனைவருக்கும் இலவசமாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. மருத்துவமனைகளில் நோயாளிகளிடம் பணம் வாங்கும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மருத்துவமனை நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அரசு மருத்துவமனைகளில் பணம் வாங்குவது உள்ளிட்ட முறைகேடுகளை தடுக்க கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இதர மாநிலங்களோடு ஒப்பிடும்போது சுகாதாரத்துறையில் தமிழகம் வெகுவாக மாறியுள்ளது. எங்கோ நடக்கும் தவறுகளை கொண்டு சுகாதாரத்துறையை முற்றிலும் குறை கூற முடியாது. சமூக ஊடகங்களில் அரசு மருத்துவமனைகள் தொடர்பாக பரவும் வதந்திகளை பொதுமக்கள் புறக்கணிக்க வேண்டும். தற்போது கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்ட பின்னர் டெங்கு காய்ச்சல் அறிகுறி தோன்றியுள்ளது. எனவே கடந்த ஆண்டு அனுபவத்தை முன்வைத்து தமிழகத்தில் மாவட்ட அளவில் டெங்கு தடுப்பு பணிகளை கலெக்டர்களுடன் இணைந்து சுகாதாரத்துறை முன்னெடுத்துள்ளது.

மதுரை மற்றும் சென்னை அரசு மருத்துவமனைகளில் பாலியல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்து கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட உள்ளன. அரசு மருத்துவக்கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் கடந்த 5 ஆண்டுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களும், பட்டமேற்படிப்பில் 500–க்கும் மேற்பட்ட இடங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்காக 5 இடங்கள் அடங்கிய பட்டியல் மத்திய அரசிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் எந்த இடம் என்பதை மத்திய அரசு தான் முடிவு செய்யும். மத்திய அரசு அறிவிக்கும் இடத்தில் நிலம் உள்ளிட்ட வசதிகள் மாநில அரசு சார்பில் செய்து கொடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து அவர், மருத்துவமனை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் பல்வேறு சிகிச்சை பிரிவுகள், கட்டிடங்களை பார்வையிட்டு ஆலோசனை நடத்தினார். அப்போது மாவட்ட கலெக்டர் வீரராகவராவ், மருத்துவமனை டீன் மருதுபாண்டியன், சுகாதாரத்துறை துணை இயக்குனர் அர்ஜூன் குமார், மருத்துவமனை கண்காணிப்பாளர் ஷீலா ராணி மல்லிகா, தமிழக மருத்துவ கவுன்சில் தலைவர் செந்தில் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்